செய்திகள்

கோபி அருகே தலையில் கல்லை போட்டு மகனை கொன்ற தந்தை கைது

Published On 2016-12-28 11:00 IST   |   Update On 2016-12-28 11:00:00 IST
கோபி அருகே தினமும் குடித்து விட்டு தகராறு செய்ததால் தலையில் கல்லை போட்டு மகனை கொன்ற தந்தையை போலீசார் கைது செய்தனர்.
கோபி:

ஈரோடு மாவட்டம் கோபி மொடச்சூர் அருகே உள்ள கலராமணி பால்கார வீதியை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 72). கூலித் தொழிலாளியான இவருக்கு 3 மகன்கள் உள்ளனர். மனைவி பெயர் பார்வதி (65).

இவர்களின் 2-வது மகன் ஜெகநாதன் (37). திருமணமாகி விட்டது. இவர் இறைச்சி கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். ஜெகநாதனுக்கு குடிப்பழக்கம் உண்டு. சம்பாதிக்கும் பணத்தில் குடித்து விட்டு வீட்டில் வந்து ரகளை செய்வாராம். மேலும் தந்தை மாரியப்பனிடமும் அடிக்கடி குடிக்க பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டு வருவாராம்.

இதேபோல் நேற்று மாலையில் ஜெகநாதன் குடித்து விட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது அவருக்கும் அவரது தந்தை மாரியப்பனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இப்படி தினமும் குடித்து விட்டு வருகிறாயே... திருந்தவே மாட்டியா...? என்று மாரியப்பன் திட்டினார்.

இந்த தகராறு முற்றவே மகன் மீது உள்ள ஆத்திரத்தில் தந்தை அவரை அடித்து உதைத்தார். போதையில் கீழே விழுந்த ஜெகநாதன் தலையில் பெரிய கல்லை எடுத்து போட்டார். இதில் அவரது மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. ஜெகநாதன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

மகனை கொன்ற முதியவர் மாரியப்பன் அங்கிருந்து தப்பி ஓடினார். இந்த சம்பவம் குறித்து கோபி போலீசார் வழக்குப்பதிவு செய்து மாரியப்பனை தேடி வந்தனர்.

நேற்று இரவு தலைமறைவாக இருந்த தந்தை மாரியப்பனை கோபி போலீசார் கைது செய்தனர். அவர் போலீசாரிடம் கொடுத்த வாக்குமூலத்தில் ‘‘என் மகன் ஜெகநாதன் தினமும் குடித்துவிட்டு தகராறு செய்து வந்தான். எவ்வளவோ சொல்லி பார்த்தும் கேட்கவில்லை. இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் அவன் தலையில் கல்லை போட்டு தீர்த்துக் கட்டினேன்’’ என்று கூறி உள்ளார்.

போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News