செய்திகள்

ரூ.69 லட்சம் முறைகேடு: கூட்டுறவு சங்க செயலாளர், காசாளர் கைது

Published On 2016-12-27 10:24 GMT   |   Update On 2016-12-27 10:24 GMT
தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் 69 லட்ச ரூபாய் முறைகேடு செய்த செயலாளர் மற்றும் காசாளர் கைது செய்யப்பட்டனர்.
வேலூர்:

வாணியம்பாடி அடுத்த கிரிசமுத்திரத்தில் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது. இங்கு பல லட்ச ரூபாய் அளவுக்கு முறைகேடுகள் நடப்பதாக புகார்கள் எழுந்தன. மேலும் இதில் சங்கத்தின் செயலாளர் ராஜேந்திரன், காசாளர் ஏகாம்பரம் ஆகியோருக்கு தொடர்பு இருப்பதாகவும் கூறப்பட்டது. இதையடுத்து முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி திருப்பத்தூர் கூட்டுறவு சங்க துணைப் பதிவாளர் பாஸ்கரன் வேலூர் மாவட்ட வணிக குற்ற புலனாய்வுத்துறை போலீசில் புகார் கொடுத்தார்.

இதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து நடத்திய விசாரணையில் கடந்த 2005ம் ஆண்டு ஏப்ரல் 8-ம் தேதி முதல் 2011 பிப்ரவரி 21-ம் தேதி வரையான கால கட்டத்தில் 69 லட்சத்துக்கு 54 ஆயிரத்து 942 ரூபாய் பணம் கடன் கொடுத்ததாக போலியாக ஆவணங்கள் தயாரித்து முறைகேடு செய்தது தெரிய வந்தது.

இதையடுத்து இந்த முறைகேட்டில் ஈடுபட்ட செயலாளர் ராஜேந்திரன், காசாளர் ஏகாம்பரம் ஆகியோரை வணிக குற்றப் புலனாய்வுத் துறை இன்ஸ்பெக்டர் கீதா, சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜேந்திரன், விஜயன் மற்றும் போலீசார் கொண்ட குழுவினர் கைது செய்தனர். அவர்களிடம் மேலும் விசாரணை நடந்து வருகிறது.

Similar News