செய்திகள்

திருநாவுக்கரசர் காங்கிரஸ் தலைவரா? அ.தி.மு.க. தலைவரா?: தமிழிசைசவுந்தரராஜன்

Published On 2016-12-27 03:21 GMT   |   Update On 2016-12-27 08:12 GMT
திருநாவுக்கரசர் காங்கிரஸ் கட்சி தலைவரா? அல்லது அ.தி.மு.க. தலைவரா? என்று பாரதீய ஜனதா கட்சி தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் அவரை கடுமையாக தாக்கினார்.
ஆலந்தூர்:

தமிழக பாரதீய ஜனதா கட்சி தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அனைத்து முயற்சிகளையும் மத்திய அரசு எடுத்து வருகிறது, இது தொடர்பாக நீதிமன்றத்தில் தனது வாதத்தை மத்திய அரசு எடுத்துரைத்து உள்ளது.

மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் தி.மு.க. இடம்பெற்று இருந்தபோது ஜல்லிக்கட்டு நடப்பதற்கான நிரந்தர தீர்வு எதையும் கொண்டு வரவில்லை. இப்போது தி.மு.க. போராட்டம் என்று சொன்ன உடனேயே தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் நாங்களும் சேர்ந்து போராடுவோம் என்று கூறுகிறார். ஊழலில் சேர்ந்தவர்கள் இதிலும் சேருவார்கள்.

தமிழகத்தில் பாரதீய ஜனதா கட்சி புழக்கத்தில் இல்லாத கட்சி என திருநாவுக்கரசர் கூறி உள்ளார். அவரைப்போல் மற்ற கட்சிக்குமாறுகிற புழக்கம் இல்லாத கட்சி தான் எங்களுடையது. அவருடைய கட்சியை அவர் பார்க்கட்டும்.

காங்கிரஸ் கட்சிக்கு திருநாவுக்கரசர் தலைவராக இருப்பது துரதிர்ஷ்டவசமானது. அவர் சில நேரங்களில் காங்கிரஸ் கட்சி தலைவரா? அல்லது அ.தி.மு.க. தலைவரா? என்ற சந்தேகம் எழுகிறது.

இவ்வாறு அவர் கூறினார். 

Similar News