செய்திகள்

விக்கிரவாண்டி அருகே ஓடும் பஸ்சில் டிரைவர் திடீர் மரணம்: 60 பயணிகள் உயிர் தப்பினர்

Published On 2016-12-17 13:36 GMT   |   Update On 2016-12-17 13:36 GMT
விக்கிரவாண்டி அருகே ஓடும் பஸ்சில் டிரைவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு மரணம் அடைந்தார். இந்த பஸ்சில் பயணம் செய்த 60 பயணிகள் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர்.

விக்கிரவாண்டி:

சென்னையில் இருந்து திருச்சி நோக்கி 60 பயணிகளுடன் தனியார் பஸ் புறப்பட்டது. பஸ்சை திருச்சியை சேர்ந்த டிரைவர் பாலு ஓட்டி வந்தார். இந்த பஸ் இன்று அதிகாலை விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை அடுத்த முண்டியம் பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே வந்தது. அப்போது டிரைவர் பாலுவுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.

அவர் உடனடியாக பஸ்சை சாலையோரத்தில் நிறுத்தினார். பஸ்சில் இருந்த பயணிகள் அவரிடம் விசாரித்த போது தனக்கு நெஞ்சு வலிக்கிறது என்று கூறினார்.

இதைத்தொடர்ந்து உடனடியாக 108 ஆம்புலன்சு மூலம் முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக பாலுவை அனுப்பி வைத்தனர்.

அவரை பரிசோதித்த டாக்டர்கள், பாலு ஏற்கனவே இறந்து விட்டார் என்று தெரிவித்தனர்.

இது குறித்து விக்கிரவாண்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெஞ்சுவலி வந்ததும் பஸ்சை சாலையோரம் நிறுத்தியதால் பஸ்சில் பயணம் செய்த 60 பயணிகள் உயிர் தப்பினர்.

Similar News