செய்திகள்

ஜெயலலிதாவின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது: மதுரை ஆதீனம்

Published On 2016-12-09 04:08 GMT   |   Update On 2016-12-09 04:08 GMT
ஜெயலலிதாவின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது என்று மதுரை ஆதீனம் கூறினார்.
வண்டலூர்:

சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரிக்கு மதுரை ஆதீனம் நேற்று வந்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

ஜெயலலிதாவின் கொள்கைகள், எண்ணங்கள், திட்டங்களை புதிதாக பொறுப்பேற்று உள்ள முதல்-அமைச்சர் பன்னீர்செல்வத்தின் அரசு செயல்படுத்தும். பன்னீர்செல்வத்தின் ஆட்சி முழுமையாக நீடிக்கும். அ.தி.மு.க.வுக்கு மத்திய அரசு உறுதுணையாக இருக்கும்.

யார் பொறுப்புக்கு வர வேண்டும் என்று ஜெயலலிதா நினைத்தாரோ?, யாரால் அ.தி.மு.க.வை வழிநடத்திட முடியும் என்று தீர்மானித்தாரோ அவர் கட்சி பொறுப்புக்கு வருவார். அ.தி.மு.க. உடையாது. காரணம் ஜெயலலிதாவின் பாசறையில் வளர்ந்தவர்கள், உடன் இருந்தவர்கள் அந்த பக்குவத்தை பெற்று உள்ளனர்.

ஜெயலலிதாவின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. அவர் கோடியில் ஒருவர். அவருடைய இடத்தை நிரப்ப ஆயிரம் ஆண்டு காலம் ஆகலாம். என் உடலில் உயிர் இருக்கும்வரை அ.தி.மு.க.வில் யார் பொறுப்புக்கு வந்தாலும், அவர்களுக்கு என் முழு ஆதரவும், ஆசீர்வாதமும் உண்டு.

ஜெயலலிதா, சாதி, மத, இன வேறுபாடு இன்றி பல்வேறு நலத்திட்டங்களை ஏற்படுத்தினார். அந்த திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும். அ.தி.மு.க.வின் எதிர்காலம் நிச்சயமாக சிறப்பாக இருக்கும். முதல்-அமைச்சர் பன்னீர்செல்வம் அனைவரையும் சமாளித்து ஜெயலலிதாவின் திட்டங்களை நிறைவேற்றுவார்.

எதிர்க்கட்சியான தி.மு.க. நிச்சயமாக அ.தி.மு.க அரசுக்கு எந்தவித தொந்தரவும் கொடுக்கமாட்டார்கள். அ.தி.மு.க தொண்டர்கள், நிர்வாகிகள் அ.தி.மு.க. வளர்ச்சிக்காக ஒற்றுமையாக இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக அவர் ஜெயலலிதாவின் மறைவை பற்றி பேச தொடங்கிய போது கண்ணீர் விட்டு அழுதார்.

Similar News