செய்திகள்

கமி‌ஷன் பெற்றுக்கொண்டு ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொடுத்த வங்கி காசாளர் சஸ்பெண்டு

Published On 2016-11-25 15:04 GMT   |   Update On 2016-11-25 15:04 GMT
திருச்சி அருகே கமி‌ஷன் பெற்றுக் கொண்டு சட்ட விரோதமாக ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொடுத்த வங்கி கேஷியர் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.

துறையூர்:

ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசு அறிவிப்புக்கு பின்னர் நாடு முழுவதும் பொதுமக்கள் தங்களிடமுள்ள பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்றுவதற்காக வங்கியில் காத்துக் கிடக்கின்றனர்.

அதேவேளையில் சட்ட விரோதமாக கறுப்பு பணத்தை மாற்றுவோர் மீதும், அவர்களுக்கு துணை போகும் அதிகாரிகள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத்திய அரசு எச்சரித்துள்ளது.

இதற்கிடையே திருச்சி மாவட்டம் துறையூரில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி இயங்கி வருகிறது. இந்த வங்கியில் ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்காக கடந்த 10 நாட்களுக்கும் மேலாக பொதுமக்களின் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது.

இந்தநிலையில் அந்த வங்கியில் கேஷியராக பணியாற்றி வரும் ராஜேந்திரன் என்பவர் வங்கியின் அருகே உள்ள கடையில் கமி‌ஷன் பணம் வாங்கி கொண்டு சுமார் ரூ.46 லட்சம் பணத்தை மாற்றியுள்ளார்.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களிலும் பரவியது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த வங்கி மேலாளர் நடராஜன் இந்த சம்பவம் குறித்து உயர் அதிகாரிகளிடம் புகார் செய்தார். இந்த புகாரின் பேரில் வங்கி உயர் அதிகாரிகள் ராஜேந்திரனிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர் சட்ட விரோதமாக கமி‌ஷனுக்கு பணம் மாற்றி கொடுத்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவரை வங்கி பணியில் இருந்து உடனடியாக சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டுள்ளனர்.

மேலும் துறையூர் வங்கி மேலாளர் நடராஜன் துறையூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து நடராஜன் யாரிடம் பணத்தை மாற்றினார். அந்த பணம் கணக்கில் வராத கறுப்பு பணமா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News