செய்திகள்
தே.மு.தி.க. வேட்பாளர் அப்துல்லா சேட்டை ஆதரித்து தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பேசிய போது எடுத்தபடம்.

பணம் கொடுக்கமாட்டோம் என அ.தி.மு.க.-தி.மு.க.வினர் சத்திய பிரமாணம் செய்வார்களா?: விஜயகாந்த் கேள்வி

Published On 2016-11-17 04:33 GMT   |   Update On 2016-11-17 04:34 GMT
ஓட்டுக்கு பணம் கொடுக்கமாட்டோம் என்று அ.தி.மு.க.-தி.மு.க.வினர் சத்திய பிரமாணம் செய்வார்களா? என விஜயகாந்த் கேள்வியெழுப்பியுள்ளார்.
தஞ்சாவூர்:

தஞ்சை சட்டசபை தொகுதி தே.மு.தி.க. வேட்பாளரை ஆதரித்து தே.மு.தி.க. சார்பில் தஞ்சை கீழவாசல் ஆட்டுமந்தை தெருவில் பொதுக்கூட்டம் நேற்றுமாலை நடந்தது. கூட்டத்தில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தேர்தல் நடைபெற உள்ள 3 தொகுதிகளிலும் அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய 2 கட்சிகளும் ஓட்டுக்கு பணத்தை கொடுத்துவிட்டனர். பின்னர் எதற்காக இந்த தேர்தலை நடத்த வேண்டும். நடத்தாமலேயே இருந்து இருக்கலாம். தஞ்சையில் நாங்கள் அதை செய்வோம், இதை செய்தோம் என்று அ.தி.மு.க.வினரும், தி.மு.க.வினரும் சொல்லி வருகிறார்கள்.

நான் எழுதி வைத்து படிக்கமாட்டேன். மனதில் தோன்றியதைதான் பேசுவேன். மேடை நாகரீகம் இல்லை என்று சொல்கிறார்கள். பணம் கொடுத்து வரக்கூடிய மேடை நாகரீகம் எங்களுக்கு வேண்டாம். கடந்த தேர்தலில் யாருடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று கட்சி தொண்டர்களிடம் கேட்டு தான் முடிவு செய்தோம். பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கட்சியுடன் கூட்டணி வைத்து போட்டியிட்டோம். கடந்த சட்டசபை தேர்தலில் மக்கள் நலக்கூட்டணியுடன் கூட்டணி வைத்து போட்டியிட்டோம். 2 தேர்தலிலும் ஒரு இடத்தில் கூட நாங்கள் வெற்றி பெறவில்லை. அதனால் பா.ஜனதா கட்சியும், மக்கள் நலக்கூட்டணியும் எங்களை பொறுத்தவரை ஒன்று தான்.

அதனால் தான் இந்த தேர்தலில் தனித்து நிற்கிறோம். நாங்கள் எப்போதும் மக்களுடன் தான் கூட்டணி. தேர்தலில் செய்து கொண்டது பங்கீடு தான். பாராளுமன்ற தேர்தலில் 37 இடங்களில் வெற்றி பெற்றோம் என்று அ.தி.மு.க.வினர் சந்தோ‌ஷப்பட்டனர். அப்படி என்றால் கடந்த சட்டசபை தேர்தலில் 222 இடங்களில் வெற்றி பெற்று இருக்க வேண்டும். ஏன் வெற்றி பெறவில்லை. ஓட்டுக்கு பணம் கொடுக்கமாட்டோம், வாங்கமாட்டோம் என்று அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் சத்திய பிரமாணம் எடுப்பார்களா?. ஆறுகளில் மணல் கொள்ளையடிக்கப்படுகிறது. தமிழகத்தில் ஆண்டுக்கு ரூ.900 ஆயிரம் கோடிக்கு மணல் கொள்ளை நடக்கிறது.

மணல் கொள்ளை காரணமாக ஆறுகளில் மேடும், பள்ளமும் ஏற்படுகிறது. இதனால் மேட்டூர் அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் ஆறுகளில் உருவாகியுள்ள பள்ளங்களில் தேங்கிவிடுகிறது. இதன் காரணமாக டெல்டா மாவட்டங்களில் கடைமடை பகுதிக்கு தண்ணீர் சென்று சேருவதில்லை.

மணல் கொள்ளை காரணமாக தான் கடைமடை பகுதிக்கு தண்ணீர் சென்று சேரவில்லை. தஞ்சை சட்டசபை தொகுதியில் தே.மு.தி.க. வெற்றி பெற்றால் வெற்றி விழாவில் நான் பங்கேற்பேன். நாங்கள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News