செய்திகள்

பெங்களூரைச் சேர்ந்த இளம்பெண்கள் பாதுகாப்பு கேட்டு மதுரை நீதிபதியிடம் தஞ்சம்

Published On 2016-11-15 16:11 IST   |   Update On 2016-11-15 16:11:00 IST
பெற்றோர் கொலை மிரட்டல் காரணமாக பெங்களூரைச் சேர்ந்த இளம்பெண்கள் பாதுகாப்பு கேட்டு மதுரை நீதிபதியிடம் தஞ்சம் அடைந்தனர்.
மதுரை:

மதுரை மாவட்ட கோர்ட்டு வளாகத்தில் உள்ள இலவச சட்டப்பணிகள் ஆணைக்குழு நீதிபதி பன்னீர்செல்வம் முன்பு, பெங்களூரைச் சேர்ந்த தோழிகள் மாலினி (வயது19), வெரோனிகா என்ற வருண் (22) ஆகியோர் இன்று பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.

நாங்கள் இருவரும் பெங்களூரில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து கொண்டிருந்தோம். அப்போது நெருங்கிய தோழிகளாக பழகினோம்.

இதை அறிந்த பெற்றோர்கள் எங்களை கண்டித்ததுடன் கல்லூரிக்கு செல்வதை தடுத்து நிறுத்தினார்கள். இதனால் நாங்கள் இருவரும் பெற்றோர்களுக்கு தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறி பல்வேறு ஊர்களுக்கு சென்று தலைமறைவாக இருந்து வந்தோம்.

ஆனால் எங்களை கொலை செய்யும் நோக்கத்துடன் பெற்றோர்கள் துரத்தினார்கள். அவர்களிடம் இருந்து தப்பி சில நாட்களுக்கு முன்பு மதுரை ரெயில் நிலையத்துக்கு வந்தோம்.

அங்கு சிலர் கொடுத்த தகவலின்பேரில் பாரதி கண்ணம்மா அறக்கட்டளை அலுவலகத்தில் தஞ்சம் புகுந்தோம். அவர்கள் எங்களுக்கு பாதுகாப்பு கொடுத்தனர்.

இந்த இடத்தையும் பெற்றோர்கள் கண்டுபிடித்து எங்களையும், அறக்கட்டளையை சேர்ந்தவர்களையும் தாக்க முயன்றனர். எனவே எங்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று முறையிட்டனர்.

அதன்பேரில் தோழிகள் இருவருக்கும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று மதுரை மாநகர போலீஸ் கமி‌ஷனருக்கு நீதிபதி கடிதம் எழுதியதுடன் இருவரையும் போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்துக்கு செல்லுமாறு கூறினார்.

பின்னர் தோழிகள் இருவருக்கும் பாதுகாப்பு அளிக்கப்படும் என்று போலீஸ் கமி‌ஷனர் சைலேஷ்குமார் யாதவ் உறுதி அளித்தார்.

Similar News