செய்திகள்

கல்பாக்கம் அருகே அணுமின் நிலைய ஓய்வுபெற்ற ஊழியர் கொலை

Published On 2016-11-15 09:49 IST   |   Update On 2016-11-15 09:49:00 IST
கல்பாக்கம் அருகே அணுமின் நிலைய ஓய்வுபெற்ற ஊழியர் நாற்காலியால் அடித்துக்கொலை செய்யப்பட்டார்.
கல்பாக்கம்:

காஞ்சீபுரம் மாவட்டம் கல்பாக்கம் அடுத்த வாயலூர் ஊராட்சி பாரத் நகர் பள்ளிக்கூட தெருவைச் சேர்ந்தவர் பாபு ராவ் (வயது 62). ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த இவர், கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் அறிவியல் உதவியாளராக வேலை பார்த்து, கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஓய்வுபெற்றவர்.

அந்த பகுதியில் புதிதாக 2 மாடி வீடு கட்டி அதில் தனது மனைவி ராஜலட்சுமி (60) உடன் வசித்து வந்தார். இவர்களுக்கு செவ்வந்தி (25) என்ற மகளும், விஸ்வசேத்தன்யா (22) என்ற மகனும் உள்ளனர்.

மகளுக்கு திருமணமாகி சென்னையை அடுத்த காரப்பாக்கம் கிராமத்தில் குடும்பத்துடன் தங்கி இருந்து, தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். மகன் விஸ்வசேத்தன்யா, வெளி நாட்டில் உள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆந்திராவில் உள்ள உறவினர் இல்ல திருமணத்தில் கலந்துகொள்வதற்காக பாபு ராவின் மனைவி ராஜலட்சுமி, மகள் செவ்வந்தி இருவரும் ஆந்திராவுக்கு சென்று விட்டனர். வீட்டில் பாபு ராவ் மட்டும் தனியாக தங்கி இருந்தார்.

அவரது வீட்டின் மாடியில் செடிகள் வளர்ப்பதற்காக கடந்த சில மாதங்களாக வெல்டிங் வேலை அவ்வப்போது நடந்து வந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் நேற்று காலை 9.30 மணியளவில் வெல்டிங் வேலை செய்வதற்காக 2 பேர் அதற்கான கருவிகளுடன் பாபு ராவ் வீட்டுக்கு வந்து அழைப்பு மணியை அடித்தனர். ஆனால் வீட்டில் இருந்து எந்த பதிலும் வரவில்லை.

இதனால் பாபு ராவின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு பேச முயற்சி செய்தனர். பலமுறை அழைத்தும் பதில் இல்லாததால் வீட்டின் பக்கவாட்டு பகுதியில் உள்ள சமையல் அறை கதவை திறந்து பார்த்தனர்.

அப்போது வீட்டின் உள்ளே தரையில் பாபு ராவ், ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி கல்பாக்கம் போலீஸ் நிலையத்துக்கு சென்று தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக மாமல்லபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு சேகர், கல்பாக்கம் இன்ஸ்பெக்டர் குமரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அதில் பாபு ராவ், மரத்தால் ஆன புதிய நாற்காலியால் பலமாக அடித்துக்கொலை செய்யப்பட்டது தெரிந்தது.

சம்பவ இடத்துக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முத்தரசி வந்து பார்வையிட்டார். பின்னர் கல்பாக்கம் அணுசக்தி துறை ஊழியர் குடியிருப்பில் உள்ள விருந்தினர் மாளிகையில் போலீஸ் அதிகாரிகளுடன் இது சம்பந்தமாக ஆலோசனை நடத்தினார்.

சம்பவ இடத்துக்கு திருக்கழுக்கன்றம் தாசில்தார் சீதா, கிராம நிர்வாக அலுவலர் சித்ரா உள்பட வருவாய்த்துறையினர் நேரில் சென்று பார்வையிட்டனர்.

காஞ்சீபுரத்தில் இருந்து மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். மோப்ப நாய், சம்பவ இடத்தில் இருந்து சிறிது தூரம் ஓடி நின்று விட்டது. யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. கைரேகை நிபுணர்கள் கதவு மற்றும் அங்கு இருந்த பொருட்களில் பதிவான கைரேகைகளை பதிவு செய்து கொண்டனர்.

போலீசார் வீடு முழுவதும் சோதனை செய்தனர். ஆனால் வீட்டில் இருந்த பீரோக்கள் மற்றும் பொருட்கள் எந்த சேதமும் இன்றி காணப்பட்டது. பின்னர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

வீட்டில் நகை, பணம் திருட்டு போகவில்லை. ஒரு சிலிண்டர் மட்டும் மாயமாகி உள்ளது. எனவே பாபு ராவ் நகை, பணத்துக்காக கொலை செய்யப்படவில்லை என்பது தெரிய வந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும் பாபு ராவ் எதற்காக கொலை செய்யப்பட்டார்?, கொலையாளிகள் யார்? என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

Similar News