சீர்காழி அருகே இந்து முறைப்படி அமெரிக்க ஜோடிக்கு திருமணம்
சீர்காழி:
சீர்காழி அருகே காரைமேடு கிராமத்தில் சித்தர்புரத்தில் ஒளிலாய சித்தர் பீடம் உள்ளது. இங்கு வெளி மாவட்டங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து யாகம் நடத்தி வழிபாடு செய்வது வழக்கம்.
இந்த நிலையில் அமெரிக்காவை சேர்ந்த பேட்ரிக்-ஸ்பனி ஜோடி இந்து மதத்தின் மீது கொண்ட ஈடுபாடு காரணமாக இந்து முறைப்படி திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். அதன்படி அமெரிக்க ஜோடி திருமணம் செய்து கொள்ள ஒளிலாயம் சித்தர் பீடத்திற்கு வந்தனர்.
இதனைத்தொடர்ந்து ராஜேந்திரன் சுவாமிகள் தலைமையில் பேட்ரிக்-ஸ்பனி ஜோடிக்கு இந்து கலாசார முறைப்படி திருமணம் நடைபெற்றது. இதையொட்டி அமெரிக்க ஜோடி பட்டு வேட்டி, பட்டு சேலை அணிந்து அலங்காரம் செய்து கொண்டனர். பின்னர் மணமகன், மணமகள் அழைப்பு, ஹோமம், மணமகனுக்கு பூணூல் அணிவித்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதைத்தொடர்ந்து மேள- தாளம் முழங்க மணமகள் கழுத்தில் மணமகன் தாலி கட்டினார். பின்னர் மணமகள் அம்மி மிதிக்க, அவருக்கு மணமகன் மெட்டி அணிவிக்கும் சடங்கு நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை அருண் சிவாச்சாரியார் தலைமையில் சிவாச்சாரியார் குழுவினர் செய்து இருந்தனர். அப்போது மணமக்களுக்கு திருமணத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
இதையடுத்து தம்பதியினர், திருமணத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் விருந்து அளித்து, தங்களது மகிழ்ச்சியை தெரிவித்தனர். அதில் கலந்து கொண்டவர்கள் மணமக்களுக்கு தங்களது வாழ்த்தை தெரிவித்து பரிசு பொருட்களை வழங்கி சென்றனர்.