செய்திகள்

பாசனத்துக்கு தண்ணீர் கிடைக்காததால் மேலும் ஒரு விவசாயி மரணம்

Published On 2016-11-08 13:26 IST   |   Update On 2016-11-08 13:26:00 IST
டெல்டா மாவட்டங்களில் பாசனத்துக்கு தண்ணீர் கிடைக்காததால் கடந்த சில நாட்களாக தொடர்ந்து 5 விவசாயிகள் உயிரிழந்த சம்பவம் பொது மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
கீழ்வேளூர்:

டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர் திருவாரூர், நாகை மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களில் சம்பா சாகுபடி செய்துள்ளனர். இந்த நிலையில் போதிய அளவு பருவ மழை பெய்யவில்லை. மேலும் கர்நாடக அரசு தமிழகத்திற்கு தர வேண்டிய காவிரி நீரை முறையாக வழங்க மறுத்து வருகிறது. இதனால் டெல்டா மாவட்டங்களில் பாசனத்திற்கு தண்ணீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கடைமடை பாசன நிலங்களுக்கு தண்ணீர் சென்று சேரவில்லை. இதன் காரணமாக நெல் விதைப்பு செய்த விவசாயிகள் பயிர்கள் கருகுவதால் வேதனையில் உள்ளனர். கடன் வாங்கி விவசாயம் செய்த விவசாயிகள் பயிர்களை காப்பாற்ற முடியாத வேதனையில் உயிரிழக்கும் சம்பவம் தொடர்ந்து வருகிறது.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள ரெகுநாதபுரத்தை சேர்ந்த கோவிந்தராஜன் என்ற விவசாயி அதேபகுதியில் 4 ஏக்கர் நிலத்தில் சாகுபடி செய்து இருந்தார். அவர் பாசனத்திற்கு தண்ணீர் கிடைக்காததால் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள ஆதிச்சபுரத்தை சேர்ந்த அழகேசன் என்ற விவசாயி அதே பகுதியில் 2 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு வாங்கி நேரடி நெல் விதைப்பு செய்து இருந்தார். 2 மாதமாக பாசனத்துக்கு தண்ணீர் வராததால் வேதனை அடைந்த அவர் மயங்கி விழுந்து இறந்தார்.

மேலும் தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே உள்ள கீழதிருப்பூந்துருத்தி பகுதியை சேர்ந்த ராஜேஷ் கண்ணன் என்ற விவசாயி 2½ ஏக்கர் நிலத்தில் நேரடி நெல் விதைப்பு செய்து இருந்தார். அவர் கடந்த 25 நாட்களாக பாசனத்திற்கு தண்ணீர் கிடைக்காததால் வேதனை அடைந்தார். நாற்றங்கால் பணி செய்த அவர் மயங்கி விழுந்து இறந்தார். இதைத் தொடர்ந்து நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள ஆதனூர் ஊராட்சி அண்டர் காட்டைசோந்த ரெத்தினவேல் என்ற விவசாயி 1 ஏக்கர் நிலத்தில் 2 முறை நெல் விதைத்தும் பாசனத்துக்கு தண்ணீர் வராமல் பயிர்கள் கருகியதால் வயலில் மயங்கி விழுந்து இறந்தார்.

இந்த நிலையில் நாகை மாவட்டம் கீழ்வேளூர் வெண்மணி ஊராட்சி கீழகாவாலக்குடியை சேர்ந்த நவநீத கிருஷ்ணன் (வயது 60) என்ற விவசாயி அதே பகுதியில் சம்பா சாகுபடி செய்து இருந்தார். பாசனத்துக்கு தண்ணீர் கிடைக்காததால் பயிர்களை காப்பாற்ற முடியுமா? என்று கவலை அடைந்த அவர் இன்று வயலில் மயங்கி விழுந்து இறந்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

டெல்டா மாவட்டங்களில் பாசனத்துக்கு தண்ணீர் கிடைக்காததால் கடந்த சில நாட்களாக தொடர்ந்து 5 விவசாயிகள் உயிரிழந்த சம்பவம் பொது மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. இந்த விவசாயிகளின் குடும்பத்துக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். காவிரி தண்ணீர் கிடைக்க மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Similar News