செய்திகள்

பாசனத்துக்கு தண்ணீர் கிடைக்காததால் வயலில் மயங்கி விழுந்து விவசாயி பலி

Published On 2016-11-07 16:49 IST   |   Update On 2016-11-07 16:49:00 IST
வேதாரண்யம் அருகே 2 முறை நெல் விதைத்தும் பாசனத்துக்கு தண்ணீர் கிடைக்காததால் வயலில் மயங்கி விழுந்து விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார்.
வேதாரண்யம்:

நாகை மாவட்டம் ஆதனூர் ஊராட்சி அண்டர்காடு கிராமத்தில் வசித்து வந்தவர் ரத்தினவேல்(வயது63). விவசாயி. இவருக்கு சொந்தமாக ஆதனூர் மாரியம்மன்கோவில் அருகே ஒரு ஏக்கர் விளை நிலம் உள்ளது. இந்த நிலத்தில் 2 முறை நேரடி நெல் விதைப்பு செய்து இருந்தார். ஆனால் சரிவர மழை பெய்யாததாலும், வாய்க்காலில் தண்ணீர் இல்லாததாலும் நெற்பயிர் வளராமல் கருகி போய்விட்டன. இதனால் ரத்தினவேல் மனம் உடைந்து காணப்பட்டார். இதுகுறித்து தனது குடும்பத்தினரிடமும் கூறி புலம்பி வந்துள்ளார்.

இந்தநிலையில் 3-வது முறையாக நெல் நாற்று வாங்கி வந்து சாகுபடி செய்யலாமா? என்ற யோசனையில் ரத்தினவேல் இருந்து வந்தார். இதற்காக வயலுக்கு சென்று வருவதாக கூறிவிட்டு நேற்று காலை அவர், வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றார். வயலுக்கு சென்று பார்த்தபோது நெல் சாகுபடி செய்ய முடியவில்லையே என வேதனையில் திடீரென ரத்தினவேல் மயங்கி வயலில் விழுந்தார். இதை அந்த வழியாக சென்ற சிலர் பார்த்து அவரை மீட்டு வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே ரத்தினவேல் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து வேதாரண்யம் தாசில்தார் இளங்கோவனிடம் ரத்தினவேல் மகன் மதியழகன் கோரிக்கை மனு அளித்தார்.

அதில், 2 முறை நேரடி நெல் விதைப்பு செய்தும் பலனின்றி போய்விட்டது. பருவமழை இல்லாததாலும், வாய்க்காலில் தண்ணீர் இல்லாததாலும் நெல் சாகுபடி செய்ய முடியவில்லை. விளை நிலம் தரிசாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சியில் எனது தந்தை மயங்கி விழுந்து இறந்துவிட்டார். அரசு உதவிகள் கிடைத்தால் எங்களது வாழ்வாதாரம் நிலைக்கும்.

எனவே அரசு உதவிகளை பெற்றுதர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இறந்த ரத்தினவேலுக்கு முத்துலட்சுமி(46) என்ற மனைவியும், 3 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.

டெல்டா மாவட்டத்தில் விவசாயம் பாதிக்கப்பட்டதால் கடந்த சில நாட்களில் 4 விவசாயிகள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News