செய்திகள்
கார்த்திக்

மாமல்லபுரம் அருகே கடத்தப்பட்ட புதுமாப்பிள்ளை கொன்று புதைப்பு

Published On 2016-11-05 03:38 GMT   |   Update On 2016-11-05 03:38 GMT
மாமல்லபுரம் அருகே மனைவியுடன் உறவினர் வீட்டுக்கு சென்ற புதுமாப்பிள்ளை சொத்துக்காக கடத்திக் கொலை செய்யப்பட்டார். போலீசார் புதைக்கப்பட்ட அவரது உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ய உள்ளனர்.
மாமல்லபுரம்:

காஞ்சீபுரம் மாவட்டம் மாமல்லபுரம் அருகே உள்ள வெண்புருஷம் மீனவர் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 27). இவருக்கும் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நைனார்குப்பத்தை சேர்ந்த ரங்கீலா என்ற பெண்ணுக்கும் கடந்த செப்டம்பர் மாதம் 15-ந் தேதி திருமணம் நடந்தது.

அக்டோபர் 8-ந்தேதி கார்த்திக் தனது மனைவியுடன் மாமல்லபுரத்தை அடுத்த சூளேரிக்காட்டு குப்பத்தில் உள்ள ரங்கீலாவின் பெரியம்மா மகள் ரஞ்சிதாவின் வீட்டுக்கு சென்றார். ரஞ்சிதாவின் கணவர் டில்லிபாபு (38) சினிமா ஸ்டண்ட் மாஸ்டர். அங்கிருந்த கார்த்திக் திடீரென மாயமானார்.

இதுகுறித்து அவரது மனைவி ரங்கீலா மாமல்லபுரம் போலீசில் புகார் செய்தார். மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிரஞ்சீவி, சப்-இன்ஸ்பெக்டர் கமலதியாகராஜன் ஆகியோர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து காணாமல்போன கார்த்திக்கை தேடிவந்தனர்.

இதற்கிடையில் ரஞ்சிதாவின் கணவர் டில்லிபாபு கார்த்திக்கை கொலை செய்து புதைத்துவிட்டதாக கூறி செங்கல்பட்டு கோர்ட்டில் அக்டோபர் 25-ந் தேதி சரண் அடைந்தார். இந்த நிலையில் நேற்று மாமல்லபுரம் போலீசார் டில்லிபாபுவை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை செய்தனர்.

விசாரணையின்போது டில்லிபாபு போலீசாரிடம், “என்னுடைய மனைவி ரஞ்சிதாவின் சித்தி மகள் ரங்கீலாவின் சொத்தை அபகரிப்பதற்கு அவரது கணவர் கார்த்திக் தடையாக இருந்தார். இதனால் அக்டோபர் 8-ந்தேதி கூலிப்படையின் துணையோடு அவரை செங்கல்பட்டை அடுத்த மாமண்டூர் பகுதிக்கு கடத்திச் சென்று கொலை செய்து அங்குள்ள பாலாற்று கரையோரம் புதைத்தேன்” என்று வாக்குமூலம் அளித்தார்.

மாமல்லபுரம் போலீசார் டில்லிபாபுவை இன்று (சனிக்கிழமை) மாமண்டூர் அழைத்துச் சென்று கார்த்திக் புதைக்கப்பட்ட இடத்தை அடையாளம் காண உள்ளனர். அதன்பின்னர் மதுராந்தகம் ஆர்.டி.ஓ. மற்றும் தாசில்தார் முன்னிலையில் கார்த்திக்கின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு, அங்கேயே அரசு டாக்டர்கள் முன்னிலையில் பிரேத பரிசோதனை செய்யப்பட உள்ளது. அதன் பிறகே அவர் எப்படி கொலை செய்யப்பட்டார்? என்ற விவரம் தெரியவரும்.

டில்லிபாபு தமிழ் சினிமாவில் 3 படங்களுக்கு சண்டை பயிற்சி இயக்குனராக பணியாற்றி உள்ளதாக கூறப்படுகிறது.

Similar News