செய்திகள்

கந்தன்சாவடி கல்குட்டை பகுதியில் கழிப்பறை, சாலை வசதி கேட்டு மொட்டையடித்து போராட்டம்

Published On 2016-11-03 14:35 IST   |   Update On 2016-11-03 14:35:00 IST
கந்தன்சாவடி கல்குட்டை பகுதியில் கழிப்பறை, சாலை வசதி செய்து தரக்கோரி இளைஞர்கள் மொட்டையடித்து போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் பெண்களும் கலந்து கொண்டனர்.
திருவான்மியூர்:

சென்னை பெருங்குடி கந்தன் சாவடி அருகே கல்குட்டை பகுதி உள்ளது. இங்கு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.

இந்த பகுதிக்கு பல வருடங்களாக அடிப்படை வசதிகள் எதுவும் கிடையாது. கழிப்பறை வசதி, குடிநீர் வசதி, சாலை வசதி, மழை நீர் வடிகால் எதுவும் இல்லாததால் மக்கள் பல போராட்டங்கள் நடத்தினார்கள்.

அ.தி.மு.க., தி.மு.க. மாறி மாறி இந்த தொகுதியில் வெற்றி பெற்றும் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்காததால் மக்கள் வெறுப்படைந்துள்ளனர்.

இதனால் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரிடம் இப்பகுதி மக்கள் முறையிட்டனர். அதன் பேரில் சோழிங்கநல்லூர் பகுதி செயலாளர் அனீஷ்குமார் தலைமையில் வாலிபர்கள் திரண்டு வந்து கந்தன்சாவடி பஸ் நிறுத்தம் அருகே திடீர் போராட்டம் நடத்தினார்கள். இந்த போராட்டத்தில் பெண்களும் கலந்து கொண்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட வாலிபர்கள் 11 பேர் திடீரென நடுரோட்டில் அமர்ந்து மொட்டையடித்து கொண்டனர். அவர்கள் கூறுகையில், இப்பகுதியில் வெற்றி பெற்ற அ.தி.மு.க.- தி.மு.க. மக்கள் பிரதிநிதிகள் யாரும் அடிப்படை வசதிகளை செய்து தந்ததில்லை. இன்னும் கழிப்பறை, சாலை வசதியின்றி கஷ்டப்படுகிறோம்.

கல்குட்டை பகுதிக்கு தேவையான வசதிகளை செய்து தர வலியுறுத்தி மொட்டையடித்து அதிகாரிகளின் கவனத்தை ஈர்த்துள்ளோம் என்றனர்.

அப்பகுதிக்கு வந்த போலீஸ் உதவி கமி‌ஷனர் அய்யப்பன் போராட்டம் நடத்திய வாலிபர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதைத் தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.

Similar News