புதுக்கோட்டை அருகே 15 பேருக்கு டெங்கு காய்ச்சல்: பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது
அறந்தாங்கி:
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள பெரியாலூர் கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. இங்கு 1200-க்கும் மேற்பட்டோர் வசித்து வரு கின்றனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக இப்பகுதியில் மர்ம காய்ச்சல் பரவி வருகிறது. இதில் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். அவர்கள் அறந்தாங்கி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் பலர் திருச்சி, மதுரை, காரைக்குடியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டனர்.
அவர்களில் காளிமுத்து, கேவேந்திரன், பழனிச்சாமி, சினேகா, பழனி, அண்ணாவி, முத்துலட்சுமி, முருகன், காசிநாதன், இந்துமதி, கீர்த்தனா, அம்பிகா, அபிராமி, பார்வதி, மற்றொரு கீர்த்தனா ஆகியோரை டாக்டர்கள் பரிசோதித்த போது, அவர்களுக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதியானது. இதையடுத்து அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் பெரியாலூர் பகுதியில் பலர் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொடர்ந்து காய்ச்சல் பரவி வருவது அப்பகுதி பொதுமக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. எனவே காய்ச்சல் பரவுவதை தடுக்க சுகாதாரத்துறையினர் முகாமிட்டு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.