செய்திகள்

அரியலூர் அருகே கொன்று புதைக்கப்பட்ட சமூக ஆர்வலர் கொலை: தி.மு.க. நிர்வாகி கைது

Published On 2016-10-27 11:11 IST   |   Update On 2016-10-27 11:11:00 IST
அரியலூர் அருகே கொன்று புதைக்கப்பட்ட சமூக ஆர்வலர் கொலையில் தி.மு.க. நிர்வாகி கைது செய்யப்பட்டார்.
ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள சோழன்குடிகாடு கிராமத்தை சேர்ந்தவர் விஸ்வநாதன் (வயது 70). சமூக ஆர்வலரான இவர், ஊழலுக்கு எதிராக அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் மீது உயர் அதிகாரிகளிடம் பல்வேறு புகார்களை அளித்து வந்தார்.

இந்தநிலையில் கடந்த மாதம் (செப்டம்பர்) 15-ந்தேதி மாத்தூருக்கு சென்ற அவர் அதன்பிறகு வீடு திரும்பவில்லை. அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து விஸ்வநாதனின் மருமகள் அமுதா கூவாகம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி அவரை தேடி வந்தனர்.

இதனிடையே கூலிப்படையை சேர்ந்த அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே நயினார்குடிகாடு கிராமத்தை சேர்ந்த சந்தன கடத்தல் வீரப்பன் கூட்டாளி பால முருகன்(46), சிறுகளத்தூர் கிராமத்தை சேர்ந்த பாஸ்கர்(31), நெல்லை மாவட்டம் சங்கரன் கோவிலை சேர்ந்த அழகர்(43) ஆகிய 3பேரை பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில் அவர்கள் விஸ்வநாதனை கடத்தி, கொன்று புதைத்தது தெரிய வந்தது. இதையடுத்து கடலூர் மாவட்ட எல்லைக்குட்பட்ட வெள்ளாறு பகுதியில் புதைக்கப்பட்ட விஸ்வநாதன் உடல் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

மேலும் 3பேரையும் கைது செய்து, விஸ்வநாதன் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர். அப்போது அரியலூரில் தியேட்டர் ஒன்றை வாங்குவது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனையில் கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் முருகன் குடியை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் ஒருவரின் தூண்டுதலின் பேரில் விஸ்வநாதன் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

மேலும் இந்த சம்பவத்தில் கடலூர் மாவட்டம் நல்லூர் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் மகேந்திரன், நயினார்குடிகாடை சேர்ந்த குணசேகரன் மற்றும் குமரி மாவட்டத்தை சேர்ந்த அருள், லிங்கன் ஆகியோருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதில் குணசேகரனை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர். நேற்று மகேந்திரனை கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை முடிவில் மேலும் பரபரப்பு தகவல்கள் வெளியாக வாய்ப்புள்ளது.

Similar News