செய்திகள்

ரெயில் மறியலின் போது பிரசவ வலியில் துடித்த பெண் ஆஸ்பத்திரியில் அனுமதி: ரெயிலை பின்னோக்கி எடுத்து சென்று சேர்த்தனர்

Published On 2016-10-17 16:30 IST   |   Update On 2016-10-17 16:30:00 IST
திருவாரூர் அருகே ரெயில் மறியலின் போது பிரசவ வலியில் துடித்த பெண்ணை மனித நேயத்துடன் ரெயிலை பின்னோக்கி எடுத்து சென்று ஆஸ்பத்திரியில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்த ரெயில்வே அதிகாரிகளை பயணிகளும், பொது மக்களும் பெரிதும் பாராட்டினர்.
மன்னார்குடி:

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி திருவாரூர் மாவட்டம் திருமதி குன்னம் என்ற இடத்தில் இன்று காலை காரைக்காலில் இருந்து திருச்சி சென்ற ரெயிலை மறித்து அரசியல் கட்சியினர் மற்றும் விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

அப்போது ரெயிலில் பயணம் செய்த தஞ்சை பாலாஜி நகரை சேர்ந்த ஜெயக்கொடி என்ற நிறை மாத கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டது.

வலியால் துடித்த அவரை ஆஸ்பத்திரியில் சேர்க்க ரெயில்வே அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர். இதைத் தொடர்ந்து அந்த ரெயிலை 5 கி.மீ. பின்னோக்கி இயக்கி புளிக்கரை ரெயில் நிலையம் சென்றனர். அங்கிருந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் அவரை துணை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சேர்த்தனர்.அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

ரெயில் மறியலின் போது பிரசவ வலியில் துடித்த பெண்ணை மனித நேயத்துடன் ரெயிலை பின்னோக்கி எடுத்து சென்று ஆஸ்பத்திரியில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்த ரெயில்வே அதிகாரிகளை பயணிகளும், பொது மக்களும் பெரிதும் பாராட்டினர்.

ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட ஜெயக்கொடி நாகை மாவட்டம் கீவலூரை சேர்ந்த சுதர்சன் என்பவரின் மனைவி ஆவார். ஜெயக்கொடி 9 மாத கர்ப்பிணியாக இருந்ததால் அவரை பிரசவத்திற்காக தாய் வீட்டிற்கு அழைத்து சென்ற போதுதான் அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News