செய்திகள்

மதுராந்தகம் அருகே பஞ்சு தயாரிக்கும் கம்பெனியில் தீ விபத்து

Published On 2016-10-17 06:19 GMT   |   Update On 2016-10-17 06:19 GMT
மதுராந்தகம் அருகே பஞ்சு தயாரிக்கும் கம்பெனியில் தீ விபத்து சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுராந்தகம்:

மதுராந்தகத்தை அடுத்த புதுப்பட்டியில் தனியார் பஞ்சு தயாரிக்கும் கம்பெனி உள்ளது. கார் மற்றும் வானங்களின் இருக்கைகளுக்கு தேவையான பஞ்சுகள் இங்கு தயாரிக்கப்படுகிறது.

நேற்று மாலை பணி முடிந்து ஊழியர்கள் கம்பெனியை பூட்டிச் சென்றனர். இந்த நிலையில் பஞ்சு தயாரிக்க வைத்திருந்த மூலப் பொருட்கள் அறையில் திடீரென தீப்பிடித்தது.

சிறிது நேரத்தில் தீ மளமளவென மற்ற அறைகளுக்கும் பரவியது. காற்றின் வேகத்தில் கம்பெனி முழுவதும் தீப்பற்றி எரிந்தது. இதனால் அப்பகுதியே புகை மூட்டமானது.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த காவலாளி, போலீசுக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தார். மதுராந்தகம், அச்சரப்பாக்கம், செங்கல்பட்டு, மறைமலை நகர், உத்திரமேரூரில் இருந்து 5 தீயணைப்பு வண்டிகளில் தீயணைப்பு வீரர்கள் வந்தனர்.

தீ கொளுந்து விட்டு எரிந்ததால் தீயணைப்பு வீரர்களால் உடனடியாக தீயை கட்டுக்குள் கொண்டு வரமுடியவில்லை. விடிய, விடிய தீயை அணைக்க போராடினர்.

இன்று அதிகாலை தீ முழுவதும் அணைக்கப்பட்டது. எனினும் அங்கிருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமானது. விற்பனைக்கு தயாராக இருந்த பஞ்சுகளும் கருகின. சேத மதிப்பு பல லட்சம் இருக்கும்.

மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. கம்பெனியில் தீப்பிடித்த போது ஊழியர்கள் யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக தப்பினர்.

இது குறித்து மதுராந்தகம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News