செய்திகள்

தமிழகத்துக்கு வழங்கவேண்டிய நீரை கர்நாடக அரசு தொடர்ந்து வழங்க உத்தரவிடவேண்டும் பிரதமருக்கு டாக்டர் ராமதாஸ் வேண்டுகோள்

Published On 2016-09-21 03:50 IST   |   Update On 2016-09-21 03:50:00 IST
தமிழகத்துக்கு வழங்கவேண்டிய நீரை கர்நாடக அரசு தொடர்ந்து வழங்க உத்தரவிட வேண்டும் என பிரதமருக்கு டாக்டர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை:

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

காவிரியில் தமிழகத்திற்கு வினாடிக்கு 3000 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்ற காவிரி மேற்பார்வைக்குழுவின் தீர்ப்பை ஏற்க முடியாது என்று கர்நாடகம் அறிவித்துள்ளது. வன்முறைகளை தூண்டி விடுவதன் மூலமும், கர்நாடக அணைகளில் தண்ணீர் இல்லை எனக்கூறி மோசடி செய்வதன் மூலமும் தமிழகத்திற்குரிய தண்ணீரை தர மறுப்பது ஏற்றுக்கொள்ள முடியாததாகும். இது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தையும், கூட்டாட்சி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு தத்துவத்தையும் அவமதிக்கும் செயலாகும். இதை மத்திய அரசு அனுமதிப்பது நாட்டின் ஒற்றுமைக்கு ஆபத்தாக முடியும்.

எனவே, உரிமைப்படி தமிழகத்திற்கு வழங்கவேண்டிய நீரை தொடர்ந்து வழங்கவேண்டும் என்று கர்நாடக அரசுக்கு பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிடவேண்டும். அதன்பிறகும் தமிழகத்திற்கு நீர் வழங்க கர்நாடக அரசு மறுத்தால், கர்நாடக முதல்-மந்திரி கனத்த இதயத்துடன் சில செயல்களை செய்வதைப்போல மத்திய அரசும் கனத்த இதயத்துடன் சில நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். அவற்றில் அரசியலமைப்பு சட்டத்தின் 356-வது பிரிவை பயன்படுத்தி கர்நாடக அரசை கலைப்பதும் ஒன்றாக இருக்க வேண்டுமா? என்பதை நாம் முடிவு செய்யவேண்டிய தருணம் நெருங்கிவிட்டது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Similar News