செய்திகள்

மேட்டூர் அணை நீர்மட்டம் 85 அடியை தாண்டியது: சம்பா சாகுபடிக்கு தயாராகும் விவசாயிகள்

Published On 2016-09-17 05:05 GMT   |   Update On 2016-09-17 05:05 GMT
மேட்டூர் அணை நீர்மட்டம் 85 அடியை தாண்டியது. அணையிலிருந்து 20-ந்தேதி தண்ணீர் திறக்கப்படுவதால் சம்பா சாகுபடி செய்ய விவசாயிகள் தயாராகி வருகின்றனர்.
மேட்டூர்:

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி கர்நாடக அரசு கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி ஆகிய அணைகளில் இருந்து கடந்த 6-ந்தேதி இரவு முதல் தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விட்டுள்ளது.

இந்த தண்ணீர் சீறி பாய்ந்து தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது.

கடந்த 2 நாட்களாக மேட்டூர் அணைக்கு தண்ணீர் வரத்து குறைந்து உள்ளது. நேற்று முன்தினம் வியாழக்கிழமை அன்று விநாடிக்கு 13 ஆயிரத்து 900 கன அடி வீதம் தண்ணீர் அணைக்கு வந்தது. நேற்று (வெள்ளிக்கிழமை) சற்று குறைந்து விநாடிக்கு 12,627 கன அடி வீதம் தண்ணீர் வந்தது.

இன்று தண்ணீர் மேலும் குறைந்து விநாடிக்கு 11,655 கன அடி வீதம் தண்ணீர் அணைக்கு வருகிறது. நேற்றும், இன்றும் நீர்வரத்து ஒப்பிடுகையில் நீர்வரத்து விநாடிக்கு 972 கன அடி வீதம் சரிந்து உள்ளது.

குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து விநாடிக்கு 1,250 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

நேற்று காலையில் மேட்டூர் அணை நீர்மட்டம் 84.76 அடியாக உயர்ந்தது. இன்று காலை 8 மணி அளவில் நீர்மட்டம் 85.58 அடியாக உள்ளது.

நீர் வரத்தை விட, அணையில் இருந்து குடிநீருக்காக திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு குறைவாக இருப்பதால் மேட்டூர் அணை நீர்மட்டம் தினமும் ஒரு அடி வீதம் உயர்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், நேற்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா, விவசாயிகள் சம்பா சாகுபடி மேற்கொள்ள ஏதுவாக வருகிற 20-ந்தேதி முதல் (செவ்வாய்க்கிழமை) பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டார். இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்த தண்ணீரை கொண்டு சம்பா சாகுபடி செய்ய விவசாயிகள் தயாராகி வருகின்றனர்.

தற்போது, கிணற்றுப் பாசன நீர் மூலம் விவசாயிகள் நாற்றங்கால் விட்டுள்ளனர். இன்னும் சில நாட்களில் நடவுப் பணிகள் தொடங்க உள்ளனர். இதனால், தொடர்ந்து 3 மாதங்களுக்கு தண்ணீர் திறந்தால் சம்பா சாகுபடி முழுமையடையும் என்று விவசாயிகள் கூறியுள்ளனர்.

Similar News