செய்திகள்

பெண் கொடுக்க மறுத்ததால் காதலன் தீக்குளித்து பலி: அதிர்ச்சியில் மாணவி தற்கொலை

Published On 2016-09-09 11:46 IST   |   Update On 2016-09-09 11:46:00 IST
மதுராந்தகம் அருகே பெண் கொடுக்க மறுத்ததால் காதல் தீக்குளித்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்த தகவல் கிடைத்ததும் மாணவியும் தற்கொலை செய்து கொண்டார்.
மதுராந்தகம்:

மதுராந்தகம் அடுத்த படாளம் அருகே உள்ள செட்டிமேடு கிராமத்தை சேர்ந்தவர் கவிதாசன். இவரது மகள் செல்வி என்கிற நுண்மதி.

பிளஸ் 1 படித்து வந்தார். அதே பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் (18). விவசாய கூலி வேலை செய்து வந்தார். இவரும் மாணவி செல்வியும் காதலித்து வந்தனர்.

செல்வியை திருமணம் செய்து கொள்ள விரும்பிய விஜயகுமார் நேற்று காலை அவரது தந்தை கவிதாசனிடம் சென்று பெண் கேட்டார்.

அதற்கு கவிதாசன், படிக்கிற பெண்ணை திருமணம் செய்து கொடுக்க கேட்கிறாயா இந்த வயதில் காதல் தேவையா என்று திட்டி பெண் கொடுக்க மறுத்து விட்டார்.

இதனால் விரக்தியுடன் வீட்டுக்கு வந்த விஜயகுமார் உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளித்தார். தீயில் கருகி அலறிய அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

மாலையில் பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்த செல்விக்கு விஜயகுமார் தீக்குளித்த தகவல் தெரிந்ததும் கடும் அதிர்ச்சி அடைந்தார். காதலன் இறந்து விடுவார் என்ற மனவேதனையில் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த நிலையில் ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடிய விஜயகுமார் இன்று காலை சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இதுகுறித்து படாளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கிறார்கள்.

Similar News