செய்திகள்

காஞ்சீபுரம் அருகே வரதட்சணை கொடுமையால் 6 மாத கர்ப்பிணிப்பெண் தீக்குளித்து தற்கொலை

Published On 2016-09-07 11:43 IST   |   Update On 2016-09-07 11:43:00 IST
காதல் திருமணம் செய்த 10 மாதங்களில் கர்ப்பிணி பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
காஞ்சீபுரம்:

காஞ்சீபுரத்தை அடுத்த விப்பேடு கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தானம். ஆட்டோ டிரைவர். இவரது மனைவி அம்மு (வயது21).

இருவரும் கடந்த 10 மாதத்துக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். தற்போது அம்மு 6 மாத கர்ப்பிணியாக இருந்தார்.

இந்த நிலையில் சந்தானம், வரதட்சணை கேட்டு மனைவி அம்முவிடம் தகராறில் ஈடுபட்டார். இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்தது.

இதில் மனமுடைந்த அம்மு கடந்த திங்கட்கிழமை இரவு வீட்டில் இருந்த மண்எண்ணையை உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அம்மு பரிதாபமாக இறந்தார். வயிற்றில் இருந்த குழந்தையும் இறந்து போனது.

இதுபற்றி அம்முவின் பெற்றோர் காஞ்சீபுரம் தாலுகா போலீசில் புகார் தெரிவித்தனர். கணவரின் வரதட்சணை கொடுமையால் அம்மு தற்கொலை செய்து இருப்பதாக கூறி உள்ளனர்.

இது குறித்து இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். காதல் திருமணம் செய்த 10 மாதங்களில் கர்ப்பிணி பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Similar News