செய்திகள்

மாயமான இசைக்கல்லூரி மாணவர் பிணமாக மீட்பு: கொலையா? - போலீஸ் விசாரணை

Published On 2016-09-07 09:22 IST   |   Update On 2016-09-07 09:22:00 IST
மாமல்லபுரம் அருகே விருந்தில் கலந்துகொண்டபோது மாயமான இசைக்கல்லூரி மாணவர் நேற்று வடநெம்மேலி கடற்கரையில் பிணமாக மீட்கப்பட்டார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மாமல்லபுரம்:

அசாம் மாநிலம், கவுகாத்தி நகரை சேர்ந்தவர் நிலாசென்குப்தா (வயது 21). இவர் கிழக்கு கடற்கரை சாலையில் மரக்காணம் அருகில் உள்ள ஒரு தனியார் இசைப்பயிற்சி கல்லூரியில் படித்து வந்தார். கடந்த 4-ந்தேதி தனது நண்பர்கள் 18 பேருடன் மாமல்லபுரம் இ.சி.ஆர். சாலையில் உள்ள வடநெம்மேலி கடற்கரையில் உள்ள ஒரு ஓய்வு இல்லத்திற்கு சென்றார்.

அங்கு நடந்த விருந்தில் கலந்து கொண்ட நிலாசென்குப்தா திடீரென காணாமல் போய்விட்டார். பல இடங்களில் அவரை நண்பர்கள் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து மாமல்லபுரம் போலீசில் அவரது நண்பர்கள் புகார் அளித்தனர்.

இந்தநிலையில் நேற்று வடநெம்மேலி கடற்கரையில் ஒரு வாலிபர் உடல் காயங்களுடன் கிடப்பதாக மாமல்லபுரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிரஞ்சீவி, சப்-இன்ஸ்பெக்டர் கோதண்டன் மற்றும் போலீசார் அங்கு சென்ற பார்த்தபோது அது நிலாசென்குப்தாவின் உடல் என தெரியவந்தது. இதுபற்றி கவுகாத்தியில் உள்ள அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து போலீசார் நிலாசென்குப்தாவின் உடலை மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். நிலாசென்குப்தா மதுபோதையில் இருந்தபோது அவரை நண்பர்கள் அடித்துக் கொலை செய்தார்களா? அல்லது கடலில் குளிக்கும்போது அலையில் சிக்கி இறந்தாரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Similar News