செய்திகள்

வேதாரண்யம் அருகே தனியார் கல்லூரி பஸ் வயலில் பாய்ந்து விபத்து: மாணவர்கள் படுகாயம்

Published On 2016-09-03 10:52 IST   |   Update On 2016-09-03 10:52:00 IST
வேதாரண்யம் அருகே தனியார் கல்லூரி பஸ் வயலில் பாய்ந்ததால் மாணவர்கள் பலர் படுகாயமடைந்தனர்.

வேதாரண்யம்:

நாகை மாவட்டம் திருத்துறைப்பூண்டி மெயின்ரோட்டில் ஈசனூரில் ஒரு தனியார் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் சுற்றுப்பகுதியை சேர்ந்த பல கிராமங்களில் இருந்து ஏராளமான மாணவ-மாணவிகள் வந்து படித்து வருகின்றனர்.

இக்கல்லூரி சார்பில் இயக்கப்படும் பஸ் கிராம பகுதிகளுக்கும் சென்று மாணவர்களை காலையில் கல்லூரிக்கு அழைத்து வரும். பின்னர் மாலையில் அக்கல்லூரி பஸ் மூலமே அவர்கள் தங்கள் பகுதிகளுக்கு செல்வர்.வழக்கம்போல் இன்று காலை அந்த தனியார் கல்லூரி பஸ் சுற்றுப்பகுதிகளுக்கு சென்று மாணவ- மாணவிகளை ஏற்றிக்கொண்டு வேட்டைக்காரனிருப்பிலிருந்து தலை ஞாயிறு நோக்கி வந்து கொண்டிருந்தது.

காலை 9.30 மணியளவில் முதலியப்பன்கண்டி என்ற இடத்தில் பஸ் வந்தபோது எதிரே வந்த வாகனத்துக்கு வழி விடுவதற்காக டிரைவர் பஸ்சை திருப்பியுள்ளார்.

இதில் நிலைதடுமாறி பஸ் சாலையோரம் உள்ள வாய்க்காலில் இறங்கியது. இதனால் அதில் இருந்த மாணவ-மாணவிகள் அலறினர். இதைக்கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து பஸ்சில் இருந்த மாணவ-மாணவிகளை பத்திரமாக மீட்டனர். பின்னர் காயமடைந்த டிரைவர் உள்பட மாணவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் நாகை மற்றும் தலைஞாயிறு அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் தலைஞாயிறு, வேதாரண்யம், திருத்துறைப்பூண்டியிலிருந்து தீயணைப்பு நிலைய வாகனங்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும் தாசில்தார் இளங்கோவன், தலைஞாயிறு இன்ஸ்பெக்டர் சிவவடிவேல், சட்டப்பஞ்சாயத்து பொறுப்பாளர் ஆர்.எஸ்.பாண்டியன் மற்றும் அதிகாரிகள் அப்பகுதிக்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து குறித்து அறிந்த மாணவர்களின் பெற்றோரும் அங்கு குவிந்தனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Similar News