செய்திகள்

புதுவையில் காதலிக்க மறுத்த மாணவிக்கு வெட்டு: கல்லூரி மாணவர் கைது

Published On 2016-09-01 10:17 IST   |   Update On 2016-09-01 10:17:00 IST
புதுவையில் காதலிக்க மறுத்த மாணவியை அரிவாளால் வெட்டிய கல்லூரி மாணவனை வில்லியனூர் போலீசார் கைது செய்துள்ளனர்.
வில்லியனூர்:

புதுவை மாநிலம் வில்லியனூர் அருகே ஊசுட்டேரியில் தனியார் மருத்துவ கல்லூரி ஊழியர் குடியிருப்பில் வசித்து வருபவர் மரியதாஸ். இவரது மகள் அன்னாள் தெரஸ் (வயது 19).

இவர் தற்போது சேதராப்பட்டில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இவர் பிளஸ்-2 தேர்வுக்கு டியூசன் படித்தபோது அய்யங்குட்டிபாளையத்தை சேர்ந்த எழிலரசன் (வயது 19) என்பவரும் டியூசன் படித்தார். இவர் தற்போது லாஸ்பேட்டை தாகூர் கலைக்கல்லூரியில் படித்து வருகிறார்.

டியூசன் படிக்கும்போது எழிலரசன், அன்னாள் தெரசிடம் பாடம் சம்மந்தமாக பேசுவார். அவர் இதனை தவறாக எடுத்துக்கொள்ளாமல் எழிலரசனிடம் பழகி வந்தார். ஆனால் எழிலரசன் தன்னை அவர் காதலிப்பதாக எண்ணி ஒரு தலையாக காதலித்து வந்தார்.

பிளஸ்-2 முடித்ததும் அன்னாள் தெரஸ் பாக்கமுடையான் பட்டில் உள்ள தனியார் கல்லூரியில் சேர்ந்து படித்து வந்தார். அப்போது கல்லூரிக்கு செல்லும்போதும், கல்லூரி முடிந்து வீடு திரும்பும்போதும் அவரிடம் எழிலரசன் காதலை வெளிப்படுத்தி வந்தார். ஆனால் அன்னாள் தெரஸ் இதனை ஏற்கவில்லை.

தொடர்ந்து தினமும் எழிலரசன் இதுபோன்று தொல்லை கொடுத்து வந்ததால் இதுபற்றி அன்னாள் தெரஸ் தனது தந்தையிடம் முறையிட்டார். இதையடுத்து அன்னாள் தெரசை அந்த கல்லூரியில் இருந்து இடம்மாற்றி சேதராப்பட்டில் உள்ள தனியார் கல்லூரியில் சேர்த்தார்.

ஆனால் எழிலரசன் அந்த கல்லூரிக்கும் பின்தொடர்ந்து வந்து தொல்லை கொடுத்து வந்தார். இந்த நிலையில் கல்லூரி முடிந்ததும் அன்னாள் தெரஸ் ஸ்கூட்டரில் வீடு திரும்பி கொண்டு இருந்தார். அப்போது எழிலரசன் திடீரென வழிமறித்தார்.

தன்னுடைய காதலை ஏற்று கொள்ளுமாறு அன்னாள் தெரசிடம் எழிலரசன் வலியுறுத்தினார். ஆனால் வழக்கம்போல் பேச்சு கொடுக்க மறுத்து வீட்டுக்கு செல்ல முயன்றார்.

அப்போது ஆத்திரம் அடைந்த எழிலரசன் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து அன்னாள் தெரஸ் கழுத்தில் வெட்ட பாய்ந்தார். இதனை கையால் தடுக்க முயன்றார். இதில் அன்னாள் தெரசுக்கு கையில் அரிவாள் வெட்டு விழுந்தது.

உடனே அவர் காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்... என்று அலறினார். இந்த அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்தனர். இதனை பார்த்ததும் எழிலரசன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இதுகுறித்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். தலைமறைவாக இருந்த எழிலரசனை கைது செய்தனர்.

Similar News