செய்திகள்
விபத்து நடந்த இடத்தில் திரண்ட பொதுமக்கள்.

போச்சம்பள்ளி அருகே தனியார் பஸ் மோதி மாணவன் பலி

Published On 2016-08-20 11:02 IST   |   Update On 2016-08-20 11:02:00 IST
போச்சம்பள்ளி அருகே தனியார் பஸ் மோதி மாணவன் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

போச்சம்பள்ளி:

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள புதுமோட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் யாரத் பாஷா. இவரது மனைவி முனிரா. இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். மகள் ஹாப்பிரீன் பிளஸ்-2 படித்து வருகிறார்.

மகன் சையத் அசேன் (வயது 12) தர்மபுரி- திருப்பத்தூர் செல்லும் சாலையில் உள்ள பனங் காட்டூர் என்ற இடத்தில் செயல்பட்டு வரும் அரசு நடுநிலைப்பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தான்.

இந்த நிலையில், இன்று காலை சிறுவன் சையத் அசேனிடம் வீட்டுக்கு தேவையான மளிகை பொருட்களை பள்ளியின் அருகே உள்ள மளிகை கடையில் இருந்து வாங்கி வருமாறு கூறினர்.

இதையடுத்து சிறுவன் வீட்டில் இருந்து சைக்கிளை எடுத்துக் கொண்டு பள்ளி அருகே உள்ள மளிகை கடைக்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது சிறுவன் தமிழ்நாடு மின்சார வாரியம் பவர் பிளான்ட் பங்கீடும் இடம் அருகே சென்றபோது. எதிரே தர்மபுரியில் இருந்து திருப்பத்தூரை நோக்கி வந்த தனியார் பஸ் எதிர்பாராத விதமாக சிறுவனின் சைக்கிளில் மோதியது.

இதில் சைக்கிளுடன் பஸ்சின் அடிப்பகுதியில் சிக்கி கொண்ட சிறுவன் மீது கண் இமைக்கும் நேரத்திற்குள் பஸ்சின் டயர் ஏறி இறங்கியது. இதில் சிறுவன் தலை மற்றும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தான்.

விபத்து ஏற்பட்டதும் பஸ் டிரைவர் நேராக போச்சம்பள்ளி போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று நிறுத்தினார். பின்னர் அவர் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். அப்போது விபத்து நடந்த சம்பவம் குறித்து போலீசாரிடம் தெரிவித்தார்.

இதையடுத்து டிரைவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் அவர் கிருஷ்ணகிரி மாவட்டம் மோட்டூர் புலியூர் அருகே உள்ள முருங்கம்பட்டி கிராமத்தை சேர்ந்த டிரைவர் பழனி (வயது 52) என்பது தெரியவந்தது.

சிறுவன் சையத் அசேனின் தந்தை கடந்த சில ஆண்டுகளுககு முன்பு இறந்து விட்டார். தாய் மிகவும் கஷ்டப்பட்டு மகனை வளர்த்து வந்தார். மகனின் உடலை பார்த்து தாய் கதறி அழுதார். இது அங்கிருந்த அனைவரையும் கண்கலங்க வைத்தது. மேலும் பேரன் உடலை கண்டதும் தாத்தா மயங்கி விழுந்தார்.

போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சிறுவன் உடலை கைப்பற்றி போச்சம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Similar News