பல்லாவரத்தில் இடியுடன் மழை: கண்ணாடி மண்டபம் இடிந்து விழுந்ததில் 40 பேர் உயிர் தப்பினர்
தாம்பரம்:
பல்லாவரம் அருகே துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் ‘மினி பார்ட்டி ஹால்’ மண்டபம் உள்ளது. இது முழுவதும் கண்ணாடியால் அழகுப்படுத்தப்பட்டு இருந்தது.
நேற்று மாலை இங்கு கீழ்கட்டளை அம்பாள் நகரை சேர்ந்த யோகேஷ் பாபுவின் மகன் பிறந்த நாள் விழா நடைபெற்றது. இதில் அவரது உறவினர்கள் 40-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இரவு 8 மணி அளவில் பல்லாவரம் பகுதியில் திடீரென பலத்த இடி-மின்னலுடன் மழை பெய்தது. இடியின் அதிர்வால் மண்டபத்தில் இருந்த சுமார் 20 அடி உயர கண்ணாடி உடைந்து விழுந்தது.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள் அலறியடித்து வெளியே ஓட்டம் பிடித்தனர். அவர்கள் வெளியேறிய சிறிது நேரத்தில் மற்ற கண்ணாடிகளும் ஒன்றன்பின் ஒன்றாக வெடித்து நொறுங்கின. இதில் அந்த மண்டபம் முழுவதும் இடிந்து தரைமட்டமானது.
இதனை கண்ட விழாவில் கலந்து கொண்டவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சரியான நேரத்தில் அவர்கள் வெளியேறியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
தரைமட்டமான மண்டபம் முழுவதும் கண்ணாடியால் அழகுபடுத்தப்பட்டு இருந்தது. காங்கிரீட் சுவர்கள் அதில் இல்லை. எனவே இடியின் அதிர்வில் கண்ணாடி உடைந்து விழுந்தது தெரியவந்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.