செய்திகள்

கேளம்பாக்கத்தில் சென்னை என்ஜினீயர் ரூ. 50 லட்சம் கேட்டு கடத்தல்: போலீசார் மாறுவேடத்தில் சென்று மடக்கினர்

Published On 2016-07-29 11:30 IST   |   Update On 2016-07-29 11:30:00 IST
சென்னை என்ஜினீயர் ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட சம்பவம் கேளம்பாக்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்போரூர்:

கேளம்பாக்கத்தை அடுத்த நாவலூரில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை பார்த்து வருபவர் பிரேம்குமார் (வயது 28). இவரது சொந்த ஊர் ஆந்திர மாநிலம் கம்மம்.

நேற்று அதிகாலை 2 மணி அளவில் பணி முடிந்து அலுவலகத்தில் இருந்து வெளியே வந்தார். அப்போது அந்த வழியே காரில் வந்தவர்களிடம் ‘லிப்ட்’ கேட்டு ஏறினார். சிறிது நேரத்தில் காரில் இருந்த 4 பேர் கும்பல் பிரேம்குமாரை மிரட்டி கடத்தி சென்றனர்.

அவரது பெற்றோருக்கு போன் செய்த கடத்தல் கும்பல் ‘உங்கள் மகனை கடத்தி வைத்துள்ளோம், ரூ.50 லட்சம் தரவேண்டும் இல்லையெனில் பிரேம் குமாரை கொன்று விடுவோம். இதுபற்றி போலீசுக்கு தகவல் தெரிவிக்கக்கூடாது’ என்று கூறி இணைப்பை துண்டித்து விட்டனர்.

அதிர்ச்சி அடைந்த பிரேம் குமாரின் பெற்றோர் தாழம்பூர் போலீசில் புகார் தெரிவித்தனர். இதுபற்றி அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் தகவல் தெரிவித்து உஷார் படுத்தப்பட்டனர்.

வடக்கு மண்டல ஐ.ஜி. செந்தாமரைக் கண்ணன், காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முத்தரசி ஆகியோரும் அங்கு வந்து தீவிர விசாரணை நடத்தினர். கடத்தல் கும்பலை பொறி வைத்து பிடிக்க முடிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் பிரேம் குமாரின் பெற்றோரை மீண்டும் செல்போனில் தொடர்பு கொண்ட கடத்தல் கும்பல் பணத்தை கேளம்பாக்கம் பஸ்நிலையத்துக்கு கொண்டு வரும்படி கூறினர். ஆனால் அவர்கள் அவ்வளவு பணம் இல்லை. ரூ. 1 லட்சம் மட்டும் உள்ளது என்றனர்.

உடனே கடத்தல் கும்பல் ரூ. 1 லட்சத்தை பிரேம் குமாருடன் அறையில் தங்கி இருந்த சந்தீப்பிடம் கொடுத்து அனுப்புமாறு கூறினர்.

இதைத் தொடர்ந்து சந்தீப் வேடத்தில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜா பணத்தை எடுத்து சென்றார். அவரை பின்தொடர்ந்து தனிப்படையினர் இடைவெளி விட்டு சென்றனர்.

ஆனால் கடத்தல் கும்பல் கேளம்பாக்கம் பஸ்நிலையத்துக்கு வராமல் மேலும் இரண்டு இடங்களுக்கு வருமாறு கூறி அலைக்கழித்தனர். கடைசியாக கிழக்கு கடற்கரை சாலை கோவளம் சாலை சந்திப்புக்கு வருமாறு கூறினார்கள்.

நள்ளிரவு 2 மணி அளவில் போலீசார் அங்கு விரைந்து சென்று காரில் இருந்த கடத்தல் கும்பலை சேர்ந்த 2 பேரை மடக்கி பிடித்தனர். அவர்கள் தையூர் பெரியமாநகரை சேர்ந்த பார்த்திபன், ஜெயசீலன் என்பது தெரிந்தது. அவர்கள் கொடுத்த தகவலின்படி தையூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு வீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த பிரேம்குமாரை மீட்டனர்.

கடத்தல்காரர்கள் கேளம்பாக்கம் பிரவீண்பாலாஜி, அரக்கோணம் விவேக்ராஜ் ஆகியோரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கடத்தலுக்கு பயன்படுத்திய சொகுசு கார் பறிமுதல் செய்யப்பட்டது.

கைதான 4 பேரும் பணத்துக்கு ஆசைப்பட்டு என்ஜினீயரை கடத்தியதாக தெரிவித்துள்ளனர். பிரவீண் பாலாஜியும் விவேக்ராஜூம் நெருங்கிய நண்பர்கள்.

விவேக்ராஜ் அடிக்கடி வெளிநாட்டுக்கு சென்று எலக்ட்ரானிக் பொருட்களை வாங்கி வந்து இங்கு விற்பனை செய்து வந்துள்ளார். வெளிநாட்டில் பயன்படுத்திய செல்போன் சிம்கார்டை வைத்து பிரேம்குமாரை கடத்தியதும், பணம் கேட்டு பேசி இருக்கிறார்.

இதனால் ஆரம்பத்தில் கடத்தல்காரர்களின் செல்போன் எண் குறித்த தகவலை பெறுவதில் போலீசாருக்கு சிரமம் ஏற்பட்டது. பின்னர் செல்போன் டவரை வைத்து அவர்களை கைது செய்து விட்டனர்.

நேற்று மாலை 6 மணி அளவில் தொடங்கிய போலீசாரின் தேடுதல் வேட்டை இரவு 2 மணி வரை நீடித்தது. இதனால் காஞ்சீபுரம் மாவட்ட போலீசார் மத்தியில் பெரும் பரபரப்பும் ஏற்பட்டது.

கடத்தப்பட்ட என்ஜினீயரை பத்திரமாக மீட்ட தனிப்படை போலீசாரை வடக்கு மண்டல ஐ.ஜி. செந் தாமரைக்கண்ணன் பாராட்டினார்.

கைதான 4 பேரும் வேறு எந்த கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டனரா? அவர்களுக்கு வேறு யாரேனும் உதவினார்களா? என்று விசாரணை நடந்து வருகிறது.

Similar News