செய்திகள்

சென்னிமலையிலிருந்து இலங்கைக்கு ஜவுளி ஏற்றுமதி குறைந்தது: உற்பத்தியாளர்கள் கவலை

Published On 2016-07-25 09:41 IST   |   Update On 2016-07-25 09:41:00 IST
இலங்கையில் உள்நாட்டு உற்பத்தியை அதிகரித்து வருவதால், ஏற்றுமதி ஆர்டர் குறைந்து வருகிறது. மேலும் குறைய அதிக வாய்ப்புகள் உள்ளது.
சென்னிமலை:

ஈரோடு மாவட்டம் சென்னிமலை பகுதியில் விசைத்தறிகளிலும், கைத்தறிகளிலும் பல்வேறு ஜவுளி ரகங்கள் உற்பத்தியாகிறது இவை இந்தியா மட்டும் அல்லாது வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதியாகிறது.

சென்னிமலை பகுதியில் உற்பத்தியாகும் விசைத்தறி ஜவுளிகளில் ‘டெனிம்’ என்ற ரக பெட்சீட் அதிக அளவில் இலங்கைக்கு ஏற்றுமதியாகிறது, சென்னிமலை பகுதியில் இருந்து மாதம் ஒன்றுக்கு ரூ.30 லட்சம் மதிப்புள்ள 600 பேல்கள் வரை பெட்சீட்கள் ஏற்றுமதியாகிறது.

கடந்த எட்டு ஆண்டுகளாக இலங்கையில் நல்ல முறையில் வர்த்தகம் நடைபெற்றது ஜனவரி, பிப்ரவரி மாதத்தில் இலங்கைக்கு மாதம் ரூ.60 லட்சம் மதிப்பிலான பெட்சீட்கள் ஏற்றுமதி செய்யபட்டது.

சென்னிமலை பகுதியில் இருந்து 10க்கும் மேற்பட்டோர் இலங்கைக்கு ஏற்றுமதி செய்து வருகிறார்கள். தற்போது இலங்கையில் நல்ல முறையில் வியாபாரம் நடந்து வரும் நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அதன் பின்பு உள்நாட்டு உற்பத்தி தொடக்கம் இலங்கையில் இறக்குமதி போர்வை ரகங்களுக்கு கிலோவிற்கு ரூ. 20 வரை புதிய வரி என விதித்துள்ள காரணத்தால் இலங்கை வியாபாரத்தை பாதிக்குமென சென்னிமலை ஜவுளி உற்பத்தியாளர்கள் கடும் அச்சம் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து இலங்கை ஏற்றுமதியாளரும் சென்னிமலை வட்டார விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்க செயலாளர் பொன். ஈஸ்வர் மூர்த்தி கூறியதாவது:-

கடந்த நான்கு ஆண்டுகளாக இந்திய ஆர்டர்களைவிட இலங்கை ஆர்டர் சென்னிமலை ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு புது தெம்பை கொடுத்தது, தற்போது ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றம் என்ன நடக்குமோ என தெரியாமல் திகைத்தோம் இதனால் அதிக பயம் இருந்தது. திடீர் என இந்திய ஜவுளிகளை இலங்கை அரசு இறக்குமதி செய்ய தடைவிதித்தால் என்ன செய்வது என புரியாமல் இருந்தோம். இலங்கை ஏற்றுமதி ஜவுளி உற்பத்தியை குறைக்கவும் கூட முடிவு செய்தோம்.

இருந்தாலும் விற்பனை பெரிய அளவில் சரிவுகள் இல்லை, ஆனால் இலங்கையில் உள்நாட்டு உற்பத்தியை அதிகரித்து வருகின்றனர். மேலும் இறக்குமதிக்கு குறிப்பாக போர்வை ரகங்களுக்கு கிலோவிற்கு ரூ.20 வரை வரி விதித்துள்ளனர். இதனால் இலங்கை ஏற்றுமதி ஆர்டர் குறைந்து வருகிறது. மேலும் குறைய அதிக வாய்ப்புகள் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த தகவல் சென்னிமலை ஜவுளி உற்பத்தியாளர்களை கவலையடைய செய்துள்ளது.

Similar News