செய்திகள்

வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த புதுக்கோட்டை தொழிலாளி கத்தியால் குத்திக்கொலை: உறவினர்கள் சோகம்

Published On 2016-07-09 17:11 IST   |   Update On 2016-07-09 17:11:00 IST
வெளிநாட்டில் வேலைபார்த்து வந்த புதுக்கோட்டை தொழிலாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அறந்தாங்கி:

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள கம்மங்காடு அத்தானியைச் சேர்ந்தவர் நாராயணன் (வயது 37). இவர் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக பக்ரைன் நாட்டில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். விடுமுறையின் போது சொந்த ஊரான அறந்தாங்கிக்கு வந்து விட்டு, மீண்டும் பக்ரைனுக்கு சென்று விடுவார்.

அதேப்போல் கடந்த 6 மாதத்திற்கு முன்பு நாராயணன் விடுமுறையில் அறந்தாங்கிக்கு வந்தார். பின்னர் பக்ரைனுக்கு சென்று விட்டார். அங்கு அவர் பக்ரைன் தலை நகரான மனமா தலைமை போலீஸ் நிலையம் அருகே உள்ள டெலிபோன் பூத்தில் இருந்து அறந்தாங்கியில் உள்ள உறவினர்களுக்கு தினமும் பேசுவது வழக்கம்.

அது போல் நேற்றிரவு உறவினர்களுக்கு போனில் பேசி கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிலர் நாராயணனை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு தப்பியோடிவிட்டனர். அவரை கொலை செய்தவர்கள் யார், எதற்காக கொலை செய்தனர்? என்று தெரியவில்லை. இது குறித்து பக்ரைன் நாட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாராயணன் கொலை செய்யப்பட்டதை அறிந்த அவரது உறவினர்கள் சோகத்தில் மூழ்கினர். அவரை கொலை செய்த நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதோடு, நாராயணன் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டுமென பக்ரைனில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொலை செய்யப்பட்ட நாராயணனுக்கு மனைவியும்,2 பெண் குழந்தைகளும் உள்ளனர்.

Similar News