செய்திகள்

ஆரணியில் விபத்தில் மூளைச்சாவு இளம்பெண் உடல் உறுப்புகள் தானம்

Published On 2016-06-19 09:49 IST   |   Update On 2016-06-19 10:08:00 IST
ஆரணியில் விபத்தில் மூளைச்சாவு ஏற்பட்ட இளம்பெண்ணின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டது.

ஆரணி:

ஆரணி அடுத்த கீழ்ப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தபாபு. நெசவு தொழிலாளி. இவருடைய மனைவி சரண்யா (வயது25). இவர்களுக்கு லோகேஷ்(6) என்ற மகனும், பூஜா(3) என்ற மகளும் உள்ளனர்.

கடந்த 11-ந் தேதி ஆனந்தபாபு தனது பைக்கில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் ஆரணிக்கு சென்றார். வேலை முடிந்து மீண்டும் வீடு திரும்பினர். அப்போது, பைக்கில் இருந்து நிலைத்தடுமாறி சரண்யா கீழே விழுந்தார். இதனால் பைக் கட்டுப்பாட்டுக்குள் வராததால் ஆனந்தபாபுவும், குழந்தைகளுடன் கீழே விழந்தார்.

இந்த விபத்தில் சரண்யாவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. ஆனந்தபாபு, குழந்தைகள் காயமின்றி உயிர் தப்பினர். படுகாயமடைந்த சரண்யா மீட்கப்பட்டு ஆரணி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

மேல்சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டு, அங்கிருந்து சென்னை ராஜூவ்காந்தி அரசு பொது ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் சரண்யாவுக்கு நேற்று மூளைச்சாவு ஏற்பட்டது. இதனால் சரண்யாவின் உடல் உறுப்புகளை தானம் செய்ய குடும்பத்தினர் முன்வந்தனர். அதன்படி, சென்னை ராஜூவ்காந்தி ஆஸ்பத்திரியிலேயே சரண்யாவின் கண், நுரையீரல், இதய வால்வு உள்ளிட்ட உறுப்புகள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டு தானமாக பெறப்பட்டது.

இதையடுத்து சரண்யா இறந்ததாக ஆரணி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News