அரியலூர் அருகே தமிழர் நீதிக்கட்சி நிர்வாகி கொலை
அரியலூர்:
அரியலூர் அருகே உள்ள கா.அம்பாவூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன் (வயது 47). தமிழர் நீதிக்கட்சியின் அரியலூர் மாவட்ட பொறுப்பாளராக இருந்து வந்த அவர், வி.கைகாட்டியில் சைக்கிள் கடை நடத்தி வந்தார்.
நேற்றிரவு பணி முடிந்ததும் கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். தேளூர் பிரிவு சாலையில் பாப்பாத்தி அம்மன் கோவி ல் அருகே செல்லும் போது, அங்கு மறைந்திருந்த மர்ம நபர்கள் திடீரென முருகேசனை வழி மறித்தனர்.
கையில் அரிவாள் உள்பட பயங்கர ஆயுதங்கள் வைத்திருந்த அவர்கள் முருகேசனை வெட்ட முயன்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் மோட்டார் சைக்கிளை அங்கேயே போட்டு விட்டு தப்பியோடினார். இருப்பினும் அந்த கும்பலை சேர்ந்தவர்கள் முருகேசனை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டினர். இதில் பலத்த வெட்டுக் காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.
இதையடுத்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்று விட்டது. நடுரோட்டில் நடந்த இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் கொலையை நேரில் பார்த்ததும் அலறி அடித்துக் கொண்டு ஓடினர்.
இது குறித்த தகவல் அறிந்ததும் அரியலூர் மாவட்ட எஸ்.பி. அனில்குமார் கிரி, டி.எஸ்.பி. முத்துக்கருப்பன், கயர்லாபாத் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிசக்கரவர்த்தி, சப்–இன்ஸ்பெக்டர் செல்வக்குமாரி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் முருகேசன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைத்தனர்.
அவரை கொலை செய்த மர்ம நபர்கள் யார், எதற்காக கொலை செய்தனர்? என்று தெரியவில்லை. கள்ளத் தொடர்பு விவகாரத்தில் முருகேசன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும் வேறு ஏதேனும் காரணமா? என்றும் பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலை செய்யப்பட்ட முருகேசனுக்கு மஞ்சுளா என்ற மனைவியும், ஒரு மகன், 4 மகள்களும் உள்ளனர்.