செய்திகள்

நாமக்கல் அருகே அதிமுக பிரமுகர்கள் வீடுகளில் அதிகாரிகள் அதிரடி சோதனை

Published On 2016-05-07 11:13 IST   |   Update On 2016-05-07 11:13:00 IST
பணம் பதுக்கி வைத்து இருப்பதாக வந்த தகவலையடுத்து நாமக்கல் அருகே அ.தி.மு.க. பிரமுகர்கள் வீடுகளில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

நாமக்கல்:

நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரத்தில் உள்ள அ.தி.மு.க. பிரமுகர்கள் மணி, அன்பு என்ற அன்பழகன் ஆகியோர் வீடுகளில் வாக்காளர்களுக்கு வினியோகம் செய்ய பணம் பதுக்கி வைத்து இருப்பதாக நாமக்கல் மாவட்ட கலெக்டரும், தேர்தல் அதிகாரியுமான தட்சிணாமூர்த்திக்கு புகார் வந்தது.

கடந்த பாராளுமன்ற தேர்தலில் இவர்கள் 2 பேர் வீடுகளில் இருந்து வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டதாகவும், இந்த சட்டமன்ற தேர்தலிலும் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க பதுக்கி வைத்து இருப்பதாகவும் அந்தப் புகாரில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதைத் தொடர்ந்து நேற்று மாலை 2 பேரின் வீடுகளிலும் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. புதுச்சத்திரம் போலீஸ் நிலையம் அருகே உள்ள அ.தி.மு.க. பிரமுகரும் , மர அறுவை மில் அதிபருமான மணி வீட்டிலும், புதுச்சத்திரம் தாசில்தார் அலுவலகம் அருகே உள்ள அ.தி.மு.க. பிரமுகரும், டிராவல்ஸ் அதிபருமான அன்பு என்ற அன்பழகன் வீட்டிலும் இந்த சோதனை நடத்தப்பட்டது. 2 பேர் வீடுகளிலும் கிட்டத்தட்ட 2 மணி நேரம் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர் . ஆனால் பணம் எதுவும் சிக்வில்லை,

இந்த சோதனையையொட்டி அவர்களது வீடுகளின் முன்பு போலீசாரும், துணை ராணுவத்தினரும் குவிக்கப்பட்டனர்.

Similar News