செய்திகள்

அறந்தாங்கி அருகே தலையில் கல்லை போட்டு மனைவி கொலை: 2 மகன்களுடன் கணவர் தலைமறைவு

Published On 2016-04-30 20:41 IST   |   Update On 2016-04-30 20:41:00 IST
அறந்தாங்கி அருகே தலையில் கல்லை போட்டு மனைவியை கொலை செய்த கணவர். தனது 2 மகன்களுடன் தலைமறைவானார்.

அறந்தாங்கி:

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியை அடுத்த அரசர்குளம், வடபாதி பகுதியைச் சேர்ந்தவர் வள்ளிக்கண்ணு, (வயது 32). பரவாக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் ரவி (40). இவர்களுக்கு கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

இந்த தம்பதிக்கு சாருகான் (16), சஞ்சித் (9) என்ற இரு மகன்கள் உள்ளனர். கீற்று முடையும் தொழில் செய்து வரும் ரவிக்கு குடிப்பழக்கம் இருந்து வருகிறது. தினமும் குடித்து விட்டு வீட்டுக்கு வரும் கணவர் ரவியை வள்ளிக்கண்ணு கண்டித்து வந்துள்ளார். இதனால் கண வன்–மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட தகராறில் கணவருடன் கோபித்துக் கொண்டு தனது குழந்தைகளையும் விட்டுவிட்டு வள்ளிக்கண்ணு தனது சொந்த ஊரான அரசர்குளம் வடபாதிக்கு சென்று விட்டார்.

நேற்று ரவி, தனது மனைவி வள்ளிக்கண்ணுவை பார்ப்பதற்காக தனது 2 குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு வடபாதிக்கு சென்றார். அங்கு வள்ளிக் கண்ணுவின் தாயார் கனகம்பாளுக்கும், ரவிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனைக் கண்ட அக்கம்பத்தினர் சண்டையை விலக்கி ரவியை ஊருக்கு அனுப்பியுள்ளனர்.

ஆனால் ரவி மீண்டும் இரவு வருவதாக கூறிச்சென்றுள்ளார். இதனால் வள்ளிக்கண்ணுவை அக்கம் பத்தினர் எதிர்த்த வீட்டு மாடியில் தங்க வைத்தனர். கூறியது போல் இரவு 8.30 மணியளவில் ரவி மீண்டும் வந்துள்ளார். அங்கு கனகம்பாளிடம் சண்டையிட்டுள்ளார். இந்த சத்தம் கேட்டு வந்த வள்ளிக்கண்ணு ரவியிடம் சமாதானம் பேசிவிட்டு வீட்டின் முன்பு தூங்க சென்றார்.

நள்ளிரவு 2 மணிக்கு எழுந்த ரவி மீண்டும் தனது மனைவியிடம் சண்டை போட்டுள்ளார். அப்போது ஆத்திரமடைந்த ரவி கீழே கிடந்த பாறாங்கல்லை எடுத்து வள்ளிக்கண்ணுவின் தலையின் மீது போட்டுள்ளார். பலத்த காயம் அடைந்த வள்ளிக்கண்ணு சிறிது நேரத்தில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடி துடித்து இறந்தார்.

இதனை பார்த்த ரவி தனது இரண்டு குழந்தைகளையும் அழைத்து கொண்டு அங்கிருந்து தலைமறைவானார். இதுபற்றி அக்கம் பக்கத்தினர் நாகுடி போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

அதன் பேரில் புதுக்கோட்டை எஸ்.பி. சந்தோஷ் கபிமானி, அறந்தாங்கி இன்ஸ் பெக்டர் பாலமுருகன் மற்றும் நாகுடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கொலையுண்ட வள்ளிக்கண்ணுவின் உடலை மீட்டு அறந்தாங்கி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து ரவியை தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News