செய்திகள்

திருச்செந்தூரில் சரத்குமார் மனுதாக்கல்

Published On 2016-04-28 08:52 GMT   |   Update On 2016-04-28 08:56 GMT
திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிடும் ச.ம.க. தலைவர் சரத்குமார் இன்று மனுதாக்கல் செய்தார்.

திருச்செந்தூர்:

அ.தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் 233 பேர் தாங்கள் போட்டியிடும் தொகுதிக்கான தேர்தல் அலுவலகத்தில் இன்று மனுதாக்கல் செய்தனர்.

திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிடும் ச.ம.க. தலைவர் சரத்குமாரும் மனுதாக்கல் செய்தார். முன்னதாக அவர், ச.ம.க. மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் திருச்செந்தூர் தேரடி திடலில் இருந்து புறப்பட்டு கீழரதவீதி, தெற்கு ரதவீதி, மேல ரதவீதி, காமராஜர் சாலை வழியாக ஊர்வலமாக வந்து திருச்செந்தூர் உதவி கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார்.

பின்னர் திருச்செந்தூர் தொகுதி தேர்தல் அலுவலரான உதவி கலெக்டர் தியாகராஜனிடம் வேட்பு மனுதாக்கல் செய்தார். அப்போது அவருடன் அவரது மனைவி ராதிகா சரத்குமார், ச.ம.க. தென்மண்டல அமைப்பு செயலாளர் சுந்தர், திருச்செந்தூர் தொகுதி அ.தி.மு.க. செயலாளர் வடமலை பாண்டியன், ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.

வேட்பு மனுத்தாக்கல் செய்த பின்பு சரத்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:–

திருச்செந்தூர் தொகுதி முழுவதும் பொதுமக்களிடம் குறைகளை கேட்டு அறிந்து கொண்டேன். அந்த குறைகள் முழுவதும் நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பேன். திருச்செந்தூர் கோவிலை சுற்றி பூங்கா அமைக்கப்படவில்லை. நான் வெற்றி பெற்றால் கோவிலை சுற்றி பூங்கா அமைத்து சிறந்த சுற்றுலா தலமாக மாற்ற முயற்சிகள் மேற்கொள்வேன். மேலும் தொகுதிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் சாலை வசதி, போக்குவரத்து வசதி, மருத்துவ வசதி ஆகியவை தரமாக செய்து கொடுக்க நடவடிக்கை எடுப்பேன்.

திருச்செந்தூர் தொகுதியை முன்மாதிரி தொகுதியாக மாற்றிக்காட்டுவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News