செய்திகள்

ஸ்ரீபெரும்புதூர் பாரதிய ஜனதா பிரமுகர் கொலையில் 4 பேர் சிக்கினர்

Published On 2016-04-28 11:15 IST   |   Update On 2016-04-28 11:16:00 IST
ஸ்ரீபெரும்புதூர் பாரதிய ஜனதா பிரமுகர் கொலையில் 4 பேர் சிக்கி உள்ளனர்.

ஸ்ரீபெரும்புதூர்:

ஸ்ரீபெரும்புதூரை அடுத்த மண்ணூர் கிராமத்தை சேர்ந்தவர் மண்ணூர்குட்டி என்கிற வெங்கடேசன் (50). பாரதிய ஜனதா கட்சி பிரமுகர். ஸ்ரீபெரும்புதூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவராக இருந்தார்.

நேற்று மதியம் அவர் சுங்குவார் சத்திரத்தை அடுத்த திருமங்கலத்திற்கு காரில் சென்றார். காரில் இருந்து இறங்கிய போது வெங்கடேசனை 6 பேர் கும்பல் சரமாரியாக வெட்டிக் கொன்றனர். கார் டிரைவர் ராமன் தப்பி ஓடி விட்டார்.

இதுகுறித்து சுங்குவார் சத்திரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கொலையாளிகளை பிடிக்க இன்ஸ்பெக்டர் மாதவன் தலைமையில் 4 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் இந்த கொலை தொடர்பாக 4 பேர் சிக்கி உள்ளனர். அவர்களிடம் ரகசிய இடத்தில் விசாரணை நடந்து வருகிறது. கார் டிரைவர் ராமனிடமும் விசாரணை நடக்கிறது.

கடந்த 2012–ம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூரை சேர்ந்த பிரபல தொழில் அதிபர் பி.பி.ஜி. குமரன் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் வெங்கடேசன் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டு இருந்தார்.

எனவே இந்த கொலைக்கு பழிக்கு பழியாக வெங்கடேசன் தீர்த்து கட்டப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

கடந்த 6 மாதத்துக்கு முன்பு தனியார் கம்பெனி நிர்வாகிகளை மிரட்டியதாக வெங்கடேசன் மீது சுங்குவார் சத்திரம் போலீசில் வழக்கும் உள்ளது. அவர் தனியார் கம்பெனிகளில் பழைய இரும்பு பொருட்களை வாங்கி விற்கும் தொழிலும் செய்து வந்தார்.

தொழில் போட்டியில் கொலை நடந்ததா? என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.

Similar News