செய்திகள்

அடைகாக்காமல் முட்டையில் இருந்து கோழி குஞ்சு வந்த அதிசயம்: ஆச்சரியத்துடன் பார்த்து சென்ற பொதுமக்கள்

Published On 2016-04-27 08:56 IST   |   Update On 2016-04-27 08:56:00 IST
அன்னவாசல் அருகே அடைகாக்காமல் முட்டையில் இருந்து கோழி குஞ்சு வந்த அதிசயம் நடந்துள்ளது. இதை ஆச்சரியத்துடன் அப்பகுதி பொதுமக்கள் பார்த்து செல்கின்றனர்.
நார்த்தாமலை:

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே முக்கண்ணாமலைப்பட்டியை சேர்ந்தவர் அபுபக்கர் சித்திக். இவர் தனது வீட்டில் ஒரு கோழி வளர்த்து வருகிறார். இந்நிலையில் இந்த கோழி கடந்த பதினைந்து தினங்களாக தொடர்ந்து முட்டையிட்டு வந்தது. அந்த முட்டைகளை அபுபக்கர் சித்திக் தனது வீட்டில் உள்ள ஒரு அலமாரியில் சேமித்து வைத்துள்ளார். இந்நிலையில் நேற்று அந்த அலமாரியில் இருந்து கோழி குஞ்சின் சத்தம் வந்து கொண்டிருந்தது. இதையடுத்து அந்த அலமாரியை திறந்து பார்த்த அபுபக்கர் சித்திக் அதிர்ந்து போனார்.

அவர் சேமித்து வைத்திருந்த ஒரு முட்டையிலிருந்து ஒரு குஞ்சு வெளியில் வந்து கத்திக் கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அடை வைக்கப்படாமல் கோழி குஞ்சு எப்படி வந்தது என திகைத்து போனார். இது குறித்து கேள்விப்பட்ட அப்பகுதி பொதுமக்கள் ஏராளமானோர் அந்த கோழிகுஞ்சை ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.

இது குறித்து அந்த பகுதியில் கோழிப்பண்ணை வைத்து இருக்கும் ஒருவர் கூறுகையில், ‘‘வெப்பத்தில் கோழிமுட்டை பொரிக்க வாய்ப்பு உள்ளது’’. தற்போது புதுக்கோட்டை பகுதியில் 102 டிகிரிக்கு மேல் வெயில் அடித்து வருகிறது.அதனால் ஏற்பட்ட அதிக வெப்பத்தில் கோழி அடைகாக்காமலேயே முட்டை பொரித்து குஞ்சு வெளிவந்துள்ளது என்றார்.

Similar News