செய்திகள்

சமவெளி பகுதியில் வெப்ப அலை: ஊட்டியில் குவியும் சுற்றுலா பயணிகள்

Published On 2016-04-25 10:35 IST   |   Update On 2016-04-25 10:35:00 IST
வெயில் கொடுமையில் இருந்து தப்பிக்க ஊட்டியில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகிறார்கள்.
ஊட்டி:

சமவெளி பகுதியில் சுட்டெரிக்கும் வெயில் வாட்டி வதைக்கிறது. அனல் காற்று வெப்ப அலையாய் வீசி வருகிறது. வெயில் கொடுமையில் இருந்து தப்பிக்க மலைகளின் அரசி என்று வர்ணிக்கப்படும் ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் குவிந்து வருகிறார்கள். பள்ளி விடுமுறையையட்டி குடும்பம் குடும்பமாக கூட்டம் அதிகரித்து வருகிறது.

குளுகுளு சீசனை முன்னிட்டு ஆசியாவிலேயே அதிக ரகங்களை கொண்ட ஊட்டி ரோஜா பூங்காவில் ஐபிரீட், பிளோரி பாண்டா, மினியச்சர், பிரிடர், பாரம்பரிய ரோஜாக்கள் என 4 ஆயிரம் ரகங்களில் 40 ஆயிரம் செடிகள் வைக்கப்பட்டுள்ளன.

அந்த செடிகளில் சிவப்பு, வெள்ளை, கருப்பு, பச்சை, நீலம், இருவண்ண ரோஜா என்று ரோஜாக்கள் பூத்துகுலுங்குகிறது. வண்ணமயமான இந்த காட்சியை சுற்றுலா பயணிகள் அதிகம் விரும்புகிறார்கள்.

இந்நிலையில் கடந்த 2 நாட்களாக மாவட்டத்தில் பல பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது. இந்த இதமான சீதோஷ்ண நிலையை அனுபவிக்க கூட்டம் அதிகரித்து வருகிறது. உள்ளூர், வெளிமாநிலம் மற்றும் வெளிநாட்டில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் நீலகிரிக்கு வந்துள்ளனர்.

அரசு தாவரவியல் பூங்கா, படகு இல்லம், தொட்டபொட்டா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, லேம்ஸ் ராக், டால்பின்நோஸ், சூட்டிங்க மட்டம், பைக்காரா ஆகிய சுற்றுலா தலங்களில் கூட்டம் அலைமோதுகிறது.

சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்துள்ளதால் தங்கும் விடுதிகள், மற்றும் லாட்ஜூகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கட்டணத்தை முறைப்படுத்த வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தவிர ஊட்டி பஸ் நிலையத்தில் பழைய கழிவறையை அகற்றி விட்டு நவீன கழிவறைகள் கட்டப்பட்டன. ஆனால் அவைகள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படவில்லை. இதனால் இயற்கை உபாதைகளுக்காக சுற்றுலா பயணிகள் பெரும் அவதியடைந்து வருகிறார்கள்.

எனவே நவீன கழிவறையை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News