தமிழ்நாடு செய்திகள்

கூடலூர் ஹவுசிங் போர்டு அருகே மர்த்தோமா நகரில் சாலையோரம் நின்றிருந்த மரங்கள் முறிந்து சாலையில் விழுந்தது

கூடலூரில் 18 செ.மீ. மழை கொட்டி தீர்த்தது- மரங்கள் முறிந்து போக்குவரத்து பாதிப்பு

Published On 2022-07-13 10:48 IST   |   Update On 2022-07-13 10:48:00 IST
  • விடிய விடிய பெய்த கனமழைக்கு கூடலூர் நாடுகாணி சாலையில், கோழிப்பாலம் கல்லூரி அருகே நின்றிருந்த ராட்சத மரம் முறிந்து விழுந்தது.
  • ஊட்டியில் இருந்து கேரளா மற்றும் பெங்களூரு செல்லும் வாகனங்கள் செல்ல முடியாமல் நீண்ட தூரம் அணிவகுத்து நின்றது.

ஊட்டி:

நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. நேற்று நீலகிரி மாவட்டத்தில் மிக கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

நேற்று காலை முதலே மாவட்டத்தில் உள்ள கூடலூர், பந்தலூர், ஊட்டி, குந்தா உள்பட பல்வேறு இடங்களிலும் கனமழை பெய்தது. மழையுடன் காற்றும் வீசியதால் ஆங்காங்கே சாலையோரம் நின்றிருந்த மரங்களும் முறிந்து விழுந்தன.

கூடலூர் மற்றும் பந்தலூர் சுற்றுவட்டார பகுதிகளான சேரம்பாடி, கூடலூர் பஜார், பாடந்தொரை, மேல் கூடலூர், தேவாலா, சேரங்கோடு உள்ளிட்ட பகுதிகளிலும் காலையில் தொடங்கி இன்று காலை வரை பலத்த மழை கொட்டி தீர்த்தது.

விடிய விடிய பெய்த மழையால் நகரில் உள்ள அனைத்து சாலைகளிலுமே வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளிலும் , அங்குள்ள வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைந்தனர். வீடுகளில் தேங்கிய தண்ணீரை மக்கள் வாளிகளை கொண்டு வெளியேற்றனர். விவசாய நிலங்களிலும் தண்ணீர் புகுந்தது. இதேபோல் ஆறுகள், கால்வாய்களிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

விடிய விடிய பெய்த கனமழைக்கு கூடலூர் நாடுகாணி சாலையில், கோழிப்பாலம் கல்லூரி அருகே நின்றிருந்த ராட்சத மரம் முறிந்து விழுந்தது. இதனால் அந்த சாலையில் நீண்ட போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதேபோல் கூடலூர் ஹவுசிங் போர்டு அருகே மர்த்தோமா நகர் பகுதியில் சாலையோரமாக நின்றிருந்த மூங்கில் கூட்டம் சாலையின் குறுக்கே விழுந்தது. இதனால் பெங்களூரு-ஊட்டி சாலை, பெங்களூரு-கேரளா செல்லும் சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதனால் ஊட்டியில் இருந்து கேரளா மற்றும் பெங்களூரு செல்லும் வாகனங்கள் செல்ல முடியாமல் நீண்ட தூரம் அணிவகுத்து நின்றது.

இதன் காரணமாக வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மிகவும் சிரமம் அடைந்தனர். தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மரங்களை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டுள்னர்.

இதேபோல் கூடலூர், பந்தலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. அதனை தீயணைப்பு படையினர் வெட்டி அகற்றினர். இதேபோல் ஊட்டி சுற்றுவட்டார பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. தொடர் மழையால் சுற்றுலா தலங்கள் வெறிச்சோடி காணப்பட்டது.

நீலகிரி மாவட்டத்தில் அதிகபட்சமாக 6 இடங்களில் 10 செ.மீக்கு அதிகமாக மழை பெய்துள்ளது. கூடலூர் பஜார்-18 செ.மீ, மேல் கூடலூர்-16, தேவாலா-15, மேல்பவானி-13, அவலாஞ்சி-12, பந்தலூர்-10 செ.மீ மழை பதிவாகி உள்ளது.

கனமழை காரணமாக இன்று ஊட்டி, கூடலூர், பந்தலூர், குந்தா உள்ளிட்ட 4 தாலுகாக்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் அம்ரித் உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

Similar News