தமிழ்நாடு

நெடுந்தீவு அருகே மீன்பிடித்த ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேர் கைது- இலங்கை கடற்படை நடவடிக்கை

Published On 2023-07-09 02:15 GMT   |   Update On 2023-07-09 05:41 GMT
  • தடைக்காலம் முடிந்து மீனவர்கள் கடந்த சில நாட்களாக ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்று வருகின்றனர்.
  • எல்லைதாண்டி மீன்பிடித்தால் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என இலங்கை நீதிமன்றம் கூறியுள்ளது.

மீன்பிடி தடைகாலம் முடிந்து கடந்த மாதம் 22-ந்தேதி மீண்டும் கடலுக்கு சென்ற மீனவர்கள் அதிகப்படியான மீன்பாடு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தனர். ஆனால் அவர்களுக்கு மிஞ்சியதோ அடுத்தடுத்த சிறைப்பிடிப்பு சம்பவங்களும், தாக்குதலும் தான்.

முதன்முறையாக கடந்த மாதம் சிறைப்பிடிக்கப்பட்ட ராமேசுவரம், புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 22 பேர் கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுவிக்கப்பட்ட நிலையில் மேலும் 15 பேரை இன்று இலங்கை கடற்படையினர் பிடித்து சென்றுள்ளனர்.

ராமேசுவரத்தை அடுத்த தங்கச்சிமடத்தை சேர்ந்த கிரீம்ஸ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் கிறிஸ்து (வயது 40), ஆரோக்கியராஜ் (45), ஜெர்மஸ் (33), ஆரோக்கியம் (38), ரமேஷ் (25), ஜெகன் (40), பிரபு (36), மெல்டன் (45) ஆகிய 8 பேரும் மற்றும் ராமேசுவரத்தை சேர்ந்த பாலா என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் பிரியன் ரோஸ் (44), கார்ச் (30), அந்தோணி (45), பிரதீபன் (35), ஈசாக் (25), ஜான் (30), ஜனகர் (32) ஆகிய 7 பேர் என மொத்தம் 15 பேர் மீன்துறை அலுவலக அனுமதியுடன் நேற்று காலை கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

அவர்கள் இந்திய கடல் எல்லையான கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு அருகே இந்திய கடல் எல்லையில் வலைகளை விரித்து மீன்பிடித்துக்கொண்டு இருந்தனர். அப்போது அங்கு இலங்கை கடற்படைக்கு சொந்தமான ரோந்து கப்பல் அதிகவேகமாக வந்தது.

அவர்களை பார்த்ததும் ராமேசுவரம் மீனவர்கள் அச்சத்தில் வலைகளை சுருட்டிக்கொண்டு அங்கிருந்து புறப்பட தயாரானார்கள். ஆனால் அதற்குள் அந்த 2 படகுகளையும் சிங்கள கடற்படையினர் சுற்றி வளைத்தனர்.

பின்னர் மீனவர்கள் பிடித்து வைத்திருந்த விலை உயர்ந்த மீன்களை அபகரித்துக்கொண்ட தோடு, எல்லை தாண்டி வந்ததாக கூறி படகில் இருந்த 15 மீனவர்களையும் சிறைப்பிடித்தனர். பின்னர் அவர்களையும், மீனவர்களின் விசைப்படகுகளையும் இலங்கையில் உள்ள காங்கேசன்துறை முகாம் அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். தொடர்ந்து அவர்களிடம் அங்கு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

நாளை இலங்கை சிறையில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னரே அவர்கள் விடுதலையாவார்களா அல்லது சிறையில் அடைக்கப்படுவார்களா என்ற விபரம் தெரியவரும்.

இதற்கிடையே ராமேசுவரம் மீனவர்கள் 15 பேர் சிறைப்பிடிக்கப்பட்ட தகவல் அறிந்த சக மீனவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கடும் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்களை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர்.

கடந்த வாரம் தமிழக மீனவர்கள் 22 பேரை விடுவித்த இலங்கை நீதிமன்றம், இனிமேலும் எல்லை தாண்டி வந்து மீன்பிடித்தால் 2 முதல் 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று அறிவித்திருந்த நிலையில் இன்று 15 பேர் சிறைப்பிடிக்கப்பட்டு இருப்பது மீனவர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News