தமிழ்நாடு

தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு கடத்தப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட பீடி இலை பண்டல்களை காணலாம்.

தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு கடத்தப்பட்ட 1,236 கிலோ பீடி இலைகள் பறிமுதல்: 2 பேர் கைது

Published On 2023-09-28 10:04 GMT   |   Update On 2023-09-28 10:06 GMT
  • வாகனத்தில் 40 மூட்டைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 1,236 கிலோ பீடி இலைகளை பறிமுதல் செய்தனர்.
  • பறிமுதல் செய்யப்பட்ட பீடி இலைகள், மினிலாரி, இரண்டு பேரையும் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

ராமேசுவரம்:

ராமேசுவரத்தில் இருந்து கடல் வழியாக மிகவும் அருகாமையில் உள்ள இலங்கைக்கு அடிக்கடி கடத்தல் சம்பவங்கள் நடந்து வருகிறது. குறிப்பாக தங்கக்கட்டிகள், பீடி இலைகள், மஞ்சள் மற்றும் கடல்வாழ் உயிரினங்கள் கடத்தப்படுவதும் அதனை கடலோர காவல் படையினர் பறிமுதல் செய்வதும் வாடிக்கையாகி விட்டது.

இந்தநிலையில் தமிழக கடலோர பகுதியில் இருந்து இலங்கைக்கு போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாக இலங்கை வடக்கு மற்றும் கிழக்கு பிராந்திய கடற்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனைத்தொடர்ந்து, கடற்படையினர் தலைமன்னார், நெடுந்தீவு முதல் புத்தளம் கடற்பகுதி மற்றும் கடலோர பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இதில், புத்தளம் கடற்கரையில் சந்தேகத்திற்கு இடமான முறையில் சென்ற வாகனத்தை நிறுத்திய கடற்படையினர் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அந்த வாகனத்தில் 40 மூட்டைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 1,236 கிலோ பீடி இலைகளை பறிமுதல் செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லாரி கைப்பற்றப்பட்டதோடு இரண்டு பேரை கைது செய்தனர். இந்த பீடி இலைகள் தமிழகத்தில் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் இருந்து படகு மூலம் கொண்டு வரப்பட்டு அங்கிருந்த இலங்கை படகில் மாற்றப்பட்டதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

பறிமுதல் செய்யப்பட்ட பீடி இலைகள், மினிலாரி, இரண்டு பேரையும் போலீசாரிடம் ஒப்படைத்தனர். தமிழகத்தில் மன்னார் வளைகுடா கடல் வழியாக தொடர்ந்து கஞ்சா, பீடி இலைகள் கடத்தப்படுவதாகவும் இதற்கு பதிலாக தங்க கட்டிகளை கடத்தல்காரர்கள் பெற்று செல்லுவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

Tags:    

Similar News