தமிழ்நாடு

கலைஞரும்.. அரசியலும்.. முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 100-வது பிறந்தநாள் இன்று..

Published On 2023-06-03 01:55 GMT   |   Update On 2023-06-03 02:13 GMT
  • உடன்பிறப்புகளுக்கு அவர் எழுதிய கடிதங்கள், தி.மு.க.வில் ஒவ்வொரு தொண்டனையும் தட்டி எழுப்பின.
  • தமிழுக்கும், தமிழர்களுக்கும் ஓடி... ஓடி... அவர் உழைத்தபோது தென்றலாகவும், புயலாகவும் இருந்தார்.

கலைஞர்...

தமிழ் பேசும் மக்கள் இந்த உலகில் எங்கெல்லாம் வாழ்கிறார்களோ... அங்கெல்லாம் ஒலிக்கும் மந்திர சொல். தமிழ்நாட்டின் அரசியல் வரலாறை, இவர் பெயரைக் குறிப்பிடாமல் யாருமே எழுத முடியாது.

அரசியலில் கருணாநிதி அளவுக்கு ஆழம் கண்டவர்கள் இந்த உலகிலேயே நிச்சயமாக யாரும் கிடையாது. அரசியலில் அவர் எடுத்து வைத்த ஒவ்வொரு அடியும் வரலாறாக மாறியது. அரசியல் ரீதியிலான அவரது கொள்கை முடிவுகள், அவரை நாடே போற்றும் "ராஜதந்திரி" என்று பேச வைத்தது.

அரசியல் வானில் அவர் இமயம். அந்த இமயத்தை எந்த ஒரு சக்தியாலும் இன்று வரை நெருங்க இயலவில்லை என்பது நிதர்சனமான உண்மை.

அவர் காட்டிய வழியில் தமிழகம் மிளிர்ந்தது. இன்று இந்தியாவில் உள்ள மாநிலங்களில் தமிழ்நாடு தனித்துவம் கொண்டதாக உள்ளதென்றால், அதற்கு கருணாநிதி செய்த அளப்பரிய சேவைகளே அடித்தளமான காரணமாகும்.

அந்த அடித்தளம் இருக்கும் வரை அரசியலில் கருணாநிதி பெயர் ஒலித்துக் கொண்டே இருக்கும்.

தமிழ் இலக்கிய உலகம், இவர் எழுத்துக்களை தவிர்த்து விட்டு, நிச்சயம் இயங்க முடியாது. கை வலிக்க... வலிக்க அவர் எழுதினார். அந்த எழுத்துக்கள் எல்லாம் பூமாலையாக மாறி மணம் வீசின, வீசிக் கொண்டிருக்கின்றன.

அவர் எழுதிய புத்தகங்களை அடுக்கியபோது அவை கருணாநிதியின் உயரத்தை விட அதிகமாக இருந்தன. இதில் இருந்தே அவர் எழுத்தின் ஆற்றலை உணரலாம்.

உடன்பிறப்புகளுக்கு அவர் எழுதிய கடிதங்கள், தி.மு.க.வில் ஒவ்வொரு தொண்டனையும் தட்டி எழுப்பின. இது தமிழக தலைவர்கள் யாருமே செய்ய முடியாத சாதனை.

காலத்துக்கு ஏற்ற கற்பனை வளம், கட்டுக்கடங்காத வேகம் ஆகியவற்றை அவரது ஒவ்வொரு வரியிலும் காண முடியும். கலைஞரின் பலமே இந்த எழுத்து என்றால் மிகையாகாது.

இலக்கியம் தவிர திரை உலகில் அவர் செய்த சாதனைகளும் ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாக உள்ளன. எப்போதும் காலில் சக்கரம் கட்டிக் கொண்டு பம்பரமாக சுழன்ற அந்த மனிதருக்கு எப்படி இப்படி பல துறைகளில் சகலகல வல்லவனாக முத்திரை பதிக்க முடிந்தது என்பதை நினைத்துப் பார்த்தால் ஆச்சரியம் அகல நீண்ட நேரம் பிடிக்கும்.

அரசியல், சினிமா, பத்திரிகை என்று எந்த துறையை எடுத்துக் கொண்டாலும் கலைஞரின் சாதனை... இன்று கலங்கரை விளக்காக மாறி நிற்கிறது.

தமிழுக்கும், தமிழர்களுக்கும் ஓடி... ஓடி... அவர் உழைத்தபோது தென்றலாகவும், புயலாகவும் இருந்தார்.

வயோதிகம் காரணமாக அவர் சில காலம் அமைதியாக இருந்தார். அளவற்ற அருமைகளையும் அற்புதங்களையும் தன்னகத்தே கொண்டிருக்கும் ஆழ்கடல் எப்போதுமே அமைதியாகத்தான் இருக்கும். கலைஞரும் அத்தகைய பெருமை பெற்றவர்.

94 வயது காலம் வாழ்ந்த அந்த பன்முக வித்தகருக்கு எத்தனையோ தனித்துவமான சிறப்புகள் அமைந்திருந்தாலும், அவர் 'தமிழாக வாழ்ந்த தலைவர்' என்ற சிறப்பு மணி மகுடமாக உள்ளது. தமிழ் அவரிடம் குறைவின்றி நிறைந்திருந்தது. அதனால்தான் அவர் தமிழோடு ஆடினார், பாடினார், விளையாடினார், தமிழையே மூச்சாக சுவாசித்தார். கடைசி மூச்சு உள்ள வரை தமிழாகவே வாழ்ந்தார்.

அவர் தமிழாக வாழ்ந்ததால்தான் இன்றைய அறிவியல், மாபெரும் தகவல் தொடர்பு தொழில்நுட்ப புரட்சிக்கு மத்தியிலும் இளைய தலைமுறையினர் தமிழ் உணர்வுகளுடன் திகழ்கிறார்கள் என்று ஒரு ஆய்வில் தெரியவந்தது. இந்திய அரசியல் தலைவர்களில், எந்த தலைவராலும் நினைத்துப் பார்க்க முடியாத, ஏற்படுத்த முடியாத நிகரற்ற சாதனை இது.

இந்த மாபெரும் சாதனையின் பின்னணியில் கலைஞரின் உழைப்பு, உழைப்பு, உழைப்பு... முயற்சி, முயற்சி, முயற்சி, தன்னம்பிக்கை, தன்னம்பிக்கை, தன்னம்பிக்கை அடங்கியுள்ளது. இவையெல்லாம் ஒன்றிணைந்து கொடுத்த பலன்களால் தமிழ் சமுதாயத்தின் தடமே மாறியது. இதை போற்றும் வகையில்தான் கலைஞருக்கு சட்டசபையில் படத்திறப்பு விழா நடத்தப்பட்டது.

இது கலைஞருக்கு மட்டுமல்ல... ஒவ்வொரு தமிழனுக்கும் கிடைத்த பெருமை.

தமிழ் வளர்ச்சிக்கு செய்த தெண்டு

தமிழ்நாட்டில் தமிழ் மொழி செழுமை பெற கருணாநிதி செய்துள்ள சேவை ஏராளம். வடமொழி ஆதிக்கத்தை முறியடித்த அவர் தமிழர்களோடு தமிழ் இரண்டற கலப்பதற்கு வலுவான அடித்தளம் அமைத்துள்ளார். அதோடு தமிழர்களின் பாரம்பரிய பண்பாட்டு சிறப்புகளை மக்கள் என்றென்றும் நினைவில் கொள்வதற்காக அடையாள சின்னங்களை ஏற்படுத்தி உள்ளார். இதுபற்றிய ஒரு கண்ணோட்டம்.

 * மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை எழுதிய "நீராருங் கடலுடுத்த" என்ற பாடலை 1970- ம் ஆண்டு தமிழ்த்தாய் வாழ்த்து பாடலாக அறிவித்தார்.

* 1974-ம் ஆண்டு "அகர முதலி" திட்டத்தை கொண்டு வந்து தமிழ்ச்சொற்கள் தொகுப்பதற்கு வழிவகுத்தார்.

* வயது முதிர்ந்த தமிழர்களுக்கும் நிதியுதவி வழங்கும் திட்டத்தை கொண்டு வந்தார்.

* சென்னை பல்கலைக் கழகத்தின் அஞ்சல் வழி கல்வியை தமிழில் படிப்பதற்கு ஏற்பாடு செய்தார்.

* மாவட்டங்களில் அரசு அருங்காட்சி யகங் கள் தொடங்கி பண்பாட்டு பொருட்களை பாதுகாக்க ஏற்பாடு செய்தார்.

* ஆசியவியல் நிறுவனத்தை தொடங்கி தமிழியல் ஆய்வுக்கு உதவினார்.

* தமிழ்நாடு முழுவதும் ஆட்சி மொழி கருத்தரங்குகள் நடத்தினார்.

* தமிழ்நாடு முழுவதும் இசைப்பள்ளிகள் தொடங்க உத்தரவிட்டார்.

* அய்யன் திருவள்ளுவர் பிறந்த ஆண்டு கி.மு. 31 என அறிஞர்கள் வரையறுத்த முடிவின்படி, 1971- ம் ஆண்டு ஜனவரி முதல் தமிழ்நாடு அரசின் நாட்குறிப்பிலும், 1972-ம் ஆண்டு ஜனவரி முதல் தமிழ்நாடு அரசிதழிலும் திருவள்ளுவராண்டு எண்ணை குறிக்கச் செய்தார்.

* சென்னை மாநகரில் வள்ளுவர் கோட்டம் அமைத்தார். குமரிமுனையில் உலகம் வியக்குமாறு 133 அடி உயர அய்யன் திரு வள்ளுவர் சிலை நிறுவினார்.

* ஆண்டு தோறும் பொங்கல் விழாவிற்கு அடுத்த நாளில் திரு வள்ளுவர் நாள் கொண்டாடும் வழக்கத்தை கொண்டு வந்தார்.

* தைத்திங்கள் முதல் நாளே, தமிழ்ப் புத்தாண்டின் முதல் நாள் என சட்டமியற்றி நடைமுறைப்படுத்தி தமிழ் பண்பாட்டு பெருமைகளை தரணியில் உயர்த்தினார்.

* பூம்புகாரில் சிலப்பதிகார கலைக்கூடம் வடித்தார்.

* தமிழ் மன்னர்களுக்கும், புலவர்களுக்கும், சான்றோர் களுக்கும் திரு உருவச் சிலைகள், மணி மண்டபங்கள், நினைவிடங்கள் அமைத்தார்.

* தமிழ்மொழி வளர்ச்சிக் கெனத் தனி அமைச்சகம் ஏற்படுத்தினார்.

* பள்ளிகளிலும், கல்லூரி களிலும் முதல் மொழியாக தமிழ் கற்பிக்கப்படுவதுடன் இன்று தமிழகத்தில் உள்ள 53 ஆயிரத்து 548 பள்ளிகளின் வாயி லாக பயிலும் 1 கோடியே 49 லட்சம் மாணவ-மாணவி யரில் ஏறத்தாழ 75 விழுக்காடு, அதாவது 1 கோடியே 10 லட்சம் மாணவ- மாணவியர் தமிழ் வழிக் கல்வி கற்கும் சூழ்நிலைகளை மேலும் மேம்படுத்திட, பள்ளிகளில் 10-ம் வகுப்பு வரை தமிழ் மொழி கட்டாயப் பாடம் என சட்டம் கொண்டு வந்தார்.

* தமிழறிஞர்களை ஊக்குவித்திட தமிழறிஞர்களின் பெயர்களில் அரசு விருதுகள் வழங்கி சிறப்பித்தார்.

* பரிதிமாற் கலைஞர், தேவநேயப் பாவாணர், திரு.வி.க., மறைமலை அடிகள், புலவர் குழந்தை முதலான 110 தமிழறிஞர்களின் படைப்புகளை நாட்டுடைமையாக்கினார்.

* ஐ.ஏ.எஸ். தேர்வை தமிழில் எழுதுவதற்காக தமிழ் மொழி வரலாறு நூல் எழுதி வெளியிடச்செய்தார்.

* இயல், இசை, நாடக மன்றம் உருவாக்கி நலிந்த கலைஞர்களுக்கு உதவ வைப்பு நிதி ஏற்படுத்தினார்.

* புதிய இலக்கண நூலை வல்லுனர் குழு ஒன்று அமைத்து எழுதி வெளியிடச்செய்தார்.

* உலக தமிழர் அமைப்புகளை ஒருங்கி ணைத்தார்.

* மொரிசியஸ், சிங்கப்பூர், யாழ்ப்பாணம் உள்பட 22 நாடுகளுக்கு தமிழ் நூல்களை வழங்கினார்.

* உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்துக்கு நிதிகளை வாரி வாரி வழங்கினார்.

* வாகனங்களில் பதிவு எண் பலகைகளில் தமிழில் எழுதிக்கொள்ள அனுமதித்தார்.

* கருவூலங்கள் மற்றும் சம்பள கணக்கு அலுவலகங்களில் பட்டியலை தமிழில் தயாரிக்கலாம் என்று உத்தரவிட்டார்.

* நாடகக் கலை களஞ்சியம், தமிழ் இசை களஞ்சியம், மருத்து கலை களஞ்சியம் ஆகியவற்றை தமிழில் எழுதி வெளியிடச் செய்தார்.

* ரூ.10 லட்சம் செலவில் குழந்தைகளின் கலை களஞ்சியம் தயாரிக்க செய்தார்.

* மெட் ராஸ் என்னும் பெயரை சென்னை என 30.9.1996 அன்று மாற்றி னார்.

* தமிழ் தட்டச் சுக்கள் பரவ செய்தார்.

* தமிழ் சுருக்கெழுத்து நூலை அதிக அளவில் அச்சிட்டு வெளியிட்டார்.

* தமிழ் வளர்ச்சி துறைக்கு கூடுதல் அலுவலர்களை நியமித்தார்.

* சென்னை அருங்காட்சியகத்தில் தமிழ் வளர்ச்சி வளாகம் ஏற்படுத்தினார்.

* தமிழில் அறிவியல் நூல்கள் வெளிவர 15 பல்கலைக்கழகங்களுக்கு ரூ.64 லட்சம் கொடுத்தார்.

* தமிழில் சிறந்த நூல்களுக்கு பரிசு வழங்கும் திட்டத்தை கொண்டு வந்தார்.

* மருந்து சீட்டுக்களை தமிழில் எழுத உத்தரவிட்டார்.

* சிறப்பு சொல் துணை அகராதி கொண்டு வந்தார்.

* தமிழ்நாட்டில் உள்ள ரெயில் நிலையங்களில் தமிழில் பெயர் பலகை வைக்கவும், ரெயில்களுக்கு தமிழில் பெயர் சூட்டவும் மத்திய அரசிடம் அனுமதி பெற்றார்.

* வரலாற்று சிறப்பு மிக்க இடங்களில் அகழாய்வு செய்து தமிழர்களின் பாரம்பரிய சிறப்பை வெளிப்படுத்த உதவினார்.

* விடுதலை போராட்ட வீரர்கள் பற்றி நூல் வெளியிட உதவினார்.

* சேலம், தஞ்சை, விருதுநகர், காஞ்சீபுரத்தில் மண்டல கலை பண்பாட்டு மையங்கள் ஏற்படுத்தினார்.

* மழலையர் பள்ளிகளில் தமிழ் மொழியை ஒரு பாடமாக சொல்லித்தர உத்தரவிட்டார்.

* மொழிப்போர் தியாகிகளுக்கு ஓய்வூதியம் வழங்கினார்.

* தமிழக வரலாறு முழுவதையும் ஒரே தொகுதியாக வெளியிட்டு சாதனை படைத்தார்.

* வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர் பலகை வைப்பதற்காக 515 சொற்கள் அடங்கிய நூல் வெளியிட்டார்.

* கொல்கத்தா, மும்பையில் தமிழ் மையம் அமைத்தார்.

* திருவனந்த புரத்தில் நூலக கட்டிடம் ரூ.10 லட்சம் செலவில் கட்டினார்.

* மலேசிய பல்கலைக் கழகத்தில் ரூ.50 லட்சம் செலவில் தமிழ் இருக்கை நிறுவ உதவினார்.

* வானொலியில் நாளொன்று பிறக்க சொல்லொன்று அறிவோம் என்ற நிகழ்ச்சியை தொடங்க உறுதுனையாக இருந்தார்.

* தமிழில் தந்தி அனுப்பும் முறையை கண்டுபிடித்த சிவலிங்க னாருக்கு நிதியுதவி செய்தார்.

* மும்பை தமிழ்ச்சங்கத்திற்கு கட்டிடம் கட்ட உதவினார்.

* தமிழ் அறிஞர்களின் நூற்றாண்டு விழாக்களை கொண்டாடினார்.

* தமிழ் சான்றோர்களின் நூல்களை நாட்டுடைமையாக்கி அவரது குடும்பங்களுக்கு நிதியுதவி செய்தார்.

* தமிழ் அறிஞர்களின் பெயரில் விருதுகள் உருவாக்கினார்.

* மாணவ-மாணவிகளுக்காக குறள் பரிசு அறிமுகம் செய்தார்.

* சிறந்த படைப்பிலக்கிய செம்மல் ஒருவருக்கு குறள் பீட விருது ரூ.2 லட்சம் வழங்கும் திட்டத்தை கொண்டு வந்தார்.

* கல்வி மொழி வளர்ச்சிக்கு உதவும் இளம் எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கி வருகிறார்.

* அரசு அறிவிப்பு பலகைகளில் திருக்குறள் எழுத உத்தரவிட்டார்.

* தமிழ் அறிஞர்களின் வீடுகளை நினைவகங்களாக மாற்றினார்.

* தமிழுக்காக பாடுபட்ட சான்றோர்களுக்கு சிலை அமைத்தார்.

* காந்தி மண்டபம் வளாகத்தில் மொழிப்போர் காவலர்களுக்காக மணி மண்டபம் கட்டினார்.

* தமிழில் ஆகம நூல்கள் வெளியிட உத்தரவிட்டார்.

* தமிழில் அர்ச்சனை செய்வது தொடர்பாக தமிழ் போற்றி நூல்களை வெளியிட செய்தார்.

* தமிழில் வழிபாடு நடத்த உத்தரவிட்டார்.

* தமிழில் சிவவேள்வி நடத்திட அறிவுறுத்தினார்.

* தமிழ்நாடு முழு வதும் 75 கோவில் களில் திருக்குறள் வகுப்புகள் நடத்த புதிய திட்டம் கொண்டு வந்தார்.

* 1999-ல் உலக இணைய தமிழ் மாநாடு நடத்தினார்.

* கணினி தமிழ் வளர்ச்சிக்கு உலக இணைய தமிழ் பல்கலைக்கழகம் நிறுவினார்.

* தமிழ்மொழி வளர்ச்சியில் ஒரு முத்திரை சாதனையாக தமிழ் செம்மொழி என்பதை மத்திய அரசு ஏற்று அறிவித்திட செய்தார்.

* செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தை சென்னையிலேயே அமைக்கின்ற முயற்சியில் வெற்றி பெற்றார்.

* வெளிநாடுகளிலும், இந்திய அளவிலும் புகழ் பதித்துள்ள தமிழ் அறிஞர்களுக்கு குடியரசு தலைவரின் "குறள் பீட விருது", "தொல் காப்பியர் விருது" ஆகியவை வழங்கிட வகை செய்தார்.

* செம்மொழித் தமிழின் சிறப்பினை நிலை நாட்டிடும் வகையில், கோவை மாநகரில் உலக நாடுகளை வியப்பில் ஆழ்த்தும் நோக்கில் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டினை நடத்தினார்.

காலத்தை வென்றவர்.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

காலத்தை வென்றவர் தலைவர் கலைஞர்! சூரியன் உதிக்கும் முன் விழித்தெழுந்து, ஓயாது உழைக்கும் ஓய்வறியாச் சூரியன் தலைவர் கலைஞர்.

அரசியலில் மட்டுமல்லாமல் இலக்கியத்திலும், கலைத்துறையிலும் தனது முத்திரையைப் பதித்தவர். தனக்கெனத் தனி பாணியை எழுத்திலும், பேச்சிலும் வகுத்துக் காட்டியவர்.

தலைவர் கலைஞர், ஈடுஇணையற்ற பேச்சாளர், கட்டுரையாளர், வலிமையான எழுத்தாளர், சிறந்த கவிஞர் பத்திரிகையாளர், நாடகக் கலைஞர், இலக்கியப்படைப்பாளி, திரைப்படத்துறை வித்தகர், சமூக சீர்திருத்தவாதி, பகுத்தறிவாதி, நூலாசிரியர்-அரசியல் ஞானி-மிகச் சிறந்த நிர்வாகி எனப் பல துறைகளில் சிறந்து விளங்குபவர். அவர் தொடாத துறையில்லை. தொட்டுச் சிறப்படையாத துறையும் இல்லை.

"தன் பிறந்த நாள்-தன் திருமண நாள்-தான் முதன் முதலாக அருமைத் தலைவர் அண்ணாவைச் சந்தித்தநாள்-மொழிகாக்கும் போரில் முதன் முறை யாகச் சிறையேகிய நாள், அத்தனையும் தனக்கு இன்பம் தருபவை. நினைத்து மகிழத்தக்கவை" எனத் தலைவர் கலைஞர் அவர்களே, குறிப்பிட்டுள்ளார்கள்.

தலைவர் கலைஞர் அவர்கள் கழகத்தைப் பற்றிக்குறிப்பிடும் பொழுது, "எனக்குத் தாய், தந்தை, மனைவிகள், பிள்ளைகள், சகோதரர்கள் என்றிருந் தாலும், அவர்களில் சிலர் என்னை விட்டுபிரிந்தாலும், அல்லது என்னுடன் வாழ்ந்தாலும் நான் குடும்பம் என்று கருதுவது என்னையும் ஓர் அங்கமாகப் பிணைத்துக்கொண்டிருப்பதும், இந்த இயக்கம் ஒன்றைத் தவிர வேறு ஒன்றும் இல்லை" என நெஞ்சுக்கு நீதி கட்டுரையிலே தலைவர் கலைஞர் குறிப்பிட்டிருக்கிறார்.

"The Pen is Mightier than the Sword" என்பார்கள். தலைவர் கலைஞர் அவர் களின் பேனா முனை, வாள் முனையை விட வலியது. அதனால் தான் கழக உடன் பிறப்புகள் தலைவரிடம் கட்டுண்டு கிடக்கின்றனர்.

வாள் முனை, பேனா முனை என்ற வலிமையான சக்தியையெல்லாம் தன் நாவன்மையால் வென்று காட்டியவர் தலைவர் கலைஞர். தோல்வியே காணாத வரலாறு படைத்தவர் தலைவர் கலைஞர். ஐந்தாவது முறையாக, தமிழக முதல்- அமைச்சராக ஆட்சிப்பொறுப்பேற்று, அதில் இந்தியாவுக்கு பாராட்டு கின்ற தலைவராக கலைஞர் விளங்கிக்கொண்டிருக்கிறார்.

"நான் கழகத்தின் வரலாற்றின் முற்பகுதியை எழுதுகிறேன். அதன் பிற்பகுதியை தம்பி கருணாநிதி தொடர்வார்" எனத் தீர்க்கதரிசி போல் பேரறிஞர் அண்ணா அவர்கள் அன்றே குறிப்பிட்டார்.

கலைஞரின் ஐம்பெரும் முழக்கங்கள்:-

* அண்ணா வழியில் அயராது உழைப்போம்.

* ஆதிக்கமற்ற சமுதாயம் அமைத்தே தீருவோம்.

* இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம்.

* வன்முறை தவிர்த்து வறுமையை வெல்வோம்.

* மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி.

1970-ம்அண்டு திருச்சியில் நடைபெற்ற தி.மு.க. மாநாட்டில் தலைவர் கலைஞர் இந்த முழக்கங்களை பிரகடனம் செய்தார். அவற்றைச் செயல்படுத்திக்காட்டி வெற்றி கண்டவர் தலைவர் கலைஞர்.

இந்திய வரலாற்றில் கண்டிராத அளவில் தன் நெடிய பயணத்தில் சட்டமன்றப்பொன்விழா கண்டவர் தலைவர் கலைஞர்.

80 ஆண்டு காலத்திற்கும் மேலாக சமூகப்பணி, பொதுப்பணிக்கு சொந்தக்காரர். 70 ஆண்டு காலம் கழகத்தைக் கட்டிக்காத்து வருகின்ற பெருமைக்குரியவர். 60 ஆண்டு காலம் சட்டமன்றப் பணியாற்றியவர்.

சுமார் 50 ஆண்டு காலத்திற்கும் மேலாகத் தி.மு.கழகத்தலைவராக வீற்றிருப்பவர்.

13 முறை சட்டமன்ற உறுப்பினர், 18 ஆண்டு காலத்திற்கும் மேலாக தமிழக முதல்-அமைச்சராக பொறுப்பேற்று நடத்துபவர். 5-வது முறையாக முதல்-அமைச்சர் பொறுப்பு வகிக்கும் பெருமையும் பெற்றவர். தேர்தல்களில் வெற்றி மட்டுமே கண்டவர்-தோல்வியே காணாத வரலாறு படைத்த தலைவர்.

பேரறிஞர் அண்ணா ஏற்றிய லட்சிய தீபத்தைக் கையில் ஏந்தி, நாட்டில் அரசியல் நெருக்கடிகள் பல ஏற்பட்டபோது அந்த லட்சிய தீபத்தை அணையாது காத்து, தமிழ் மக்களை வழி நடத்திச் செல்லும் தகுதிமிக்கத் தலைவராக விளங்கிக் கொண்டிருப்பவர்கள் தலைவர் கலைஞர். கழகம் எனும் இயக்கத்தை சிதறாமல், கட்டிக்காத்து வழிநடத்தி வருபவர் தலைவர் கலைஞர் ஆவார்.

வள்ளுவர் கோட்டம்- குமரியில் வான்புகழ் வள்ளுவர்க்குச்சிலை-இப்படி எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றியவர். தனது ஆட்சிக் காலத்தில் சரித்திரச் சாதனைகளாகப் படைத்து வருகிறார். புதிய வரலாறு படைத்தவர்! ஏழைகளின் ஏந்தல்! வருங்காலம் வாழ்த்தும்! எக்காலமும் வாழ்வார்!

தலைவர் கலைஞர் அடியொற்றிக் கடமையாற்றிட உறுதி ஏற்போம்.

(கலைஞர் பிறந்த நாளை முன்னிட்டு மு.க.ஸ்டாலின் முன்பு எழுதிய கட்டுரையின் ஒரு பகுதி இது)

கலைஞரைக் கவர்ந்த ஐந்து

தமிழ்நாட்டின் நிகரற்ற முதல்வராக திகழ்ந்த டாக்டர் கலைஞருக்கும், 5-ம் எண்ணில் வருகிற பெயர்களுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. கலைஞரின் வெற்றிப் பின்னணியில் உள்ள பெரும்பாலான பெயர்களின் கூட்டுத் தொகை எல்லாமே ஐந்தாகவே வரும். அவற்றில் சிலவற்றைப் பார்ப்போம்.

தாயைத் தெய்வமாகக் கருதும் கலைஞரின் அன்னையின் பெயர் 'அஞ்சுகம்'. இதன் கூட்டுத் தொகை ஐந்து.

கலைஞரின் பெயர் 'கருணாநிதி'. இதன் கூட்டுத் தொகையும் ஐந்து.

கலைஞர் ஆசிரியராகப் பணியாற்றிய பத்திரிகையின் பெயர் 'குடியரசு'. இதன் கூட்டுத் தொகையும் ஐந்து.

பேரறிஞர் அண்ணாவும், கலைஞரும் திராவிட கழகத்தில் இருந்து விலகிய ஆண்டு 1949 (1+9+4+9=23=2+3=5) இதன் கூட்டுத் தொகை ஐந்து.

கலைஞர் முதன் முதலாக தேர்தலில் போட்டியிட்ட தொகுதி 'குளித்தலை'. இதன் கூட்டுத் தொகையும் ஐந்து.

இரண்டாவது முறையாக தேர்தலில் போட்டியிட்ட தொகுதி 'தஞ்சாவூர்'. இதன் கூட்டுத் தொகையும் ஐந்து.

தி.மு.க. தேர்தல் நிதிக்காக அவர் நடத்திய நாடகம் 'காகிதப் பூ'. இதன் கூட்டுத் தொகை ஐந்து.

தி.மு.க. அமோக வெற்றி பெற்று கலைஞர் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆன ஆண்டு 1967. இதன் கூட்டுத் தொகையான 23&ன் கூட்டுத் தொகையும் ஐந்து.

கணக்கு கேட்டு தி.மு.க.வில் இருந்து விலகிய எம்.ஜி.ஆர். வகித்த பதவி 'பொருளாளர்'. இதன் கூட்டுத் தொகை ஐந்து.

தி.மு.க. அமைச்சரவை மத்தியில் இருந்த காங்கிரஸ் அரசால் டிஸ்மிஸ் செய்யப்பட்ட ஆண்டு '1976'. இதன் கூட்டுத் தொகை ஐந்து.

ஏறக்குறைய 23 ஆண்டு காலம் கலைஞரின் எதிர்ப்பை பெற்ற அரசியல் கட்சியின் பெயர் 'காங்கிரஸ்'. இதன் கூட்டுத் தொகை ஐந்து.

1989 மற்றும் 1991-ம் ஆண்டில் நடந்த தேர்தலில் கலைஞர் வெற்றி பெற்ற தொகுதி 'துறைமுகம்'. இதன் கூட்டுத் தொகை ஐந்து.

கலைஞருடன் கூட்டணி சேர்ந்து மாபெரும் வெற்றி அடைந்த தேசிய தலைவர் 'மூப்பனார்'. இதன் கூட்டுத் தொகை ஐந்து.

கலைஞர் ஆசிரியராக இருந்த ஒரு பிரபல வார இதழின் பெயர் 'முத்தாரம்'. இதன் கூட்டுத் தொகை ஐந்து.

திரை உலகில் கலைஞருக்கு அழியாத புகழைத் தேடித் தந்த திரைப்படங்களான, 'பராசக்தி', 'பூம்புகார்', 'மர்மயோகி', 'ராஜகுமாரி' இதன் கூட்டுத் தொகை ஐந்து.

'தென்பாண்டி சிங்கம்' என்ற இலக்கியத்திற்காக தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் கலைஞருக்கு வழங்கிய விருதின் பெயர் 'ராஜராஜன்'. இதன் கூட்டுத் தொகை ஐந்து.

கலைஞர் பொதுவாழ்விலும், கலைத்துறையிலும் சேவை செய்த ஆண்டுகளின் எண்ணிக்கை 50. இதன் கூட்டுத் தொகை ஐந்து.

திரை உலகம் அவரது கலை உலக சேவையைப் பாராட்டி வழங்கிய தங்க 'எழுதுகோல்'. இதன் கூட்டுத் தொகை ஐந்து.

கலைஞர் எப்போதும் விரும்புகின்ற ஒரே பாடல் வரி 'தம்பி உடையான் படைக்கு அஞ்சான்'. இதன் கூட்டுத் தொகை 14=1+4=5.

கோவலன், கண்ணகிக்காக கலைஞர் கலைக்கூடம் அமைத்த கடற்கரை நகரத்தின் பெயர் பூம்புகார். இதன் கூட்டுத் தொகை ஐந்து.

கலைஞருக்கு டாக்டர் பட்டம் வழங்கிய பல்கலைக்கழகத்தின் பெயர் 'அண்ணாமலை'. இதன் கூட்டுத் தொகை ஐந்து.

மிகவும் உணர்ச்சி வசப்படும் நிலையில் கலைஞர் உபயோகிக்கும் வார்த்தை 'சும்மா இரு'. இதன் கூட்டுத் தொகை ஐந்து.

கலைஞர் தன் உயிர் மூச்சாகக் கடைப்பிடிக்கும் கொள்கை 'திராவிடம்' இதன் கூட்டுத் தொகை ஐந்து.

கலைஞருக்கு பிடித்த கிரேக்க அறிஞர் 'சாக்ரடீஸ்'. இதன் கூட்டுத் தொகை ஐந்து.

கலைஞரை கவர்ந்த சோழநாட்டு மன்னன் 'கரிகாலன்'. இதன் கூட்டுத் தொகை ஐந்து.

ஒருமுறை தேர்தலில் தனது 100 சதவீத ஆதரவை கலைஞருக்கு வழங்கிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் இயற்பெயர் 'சிவாஜிராவ்'. இதன் கூட்டுத் தொகை ஐந்து.

ரஜினிகாந்த் சார்பில் கலைஞரிடம் தூது சென்ற பத்திரிகையாளர் 'சோ.ராமசாமி'. இதன் கூட்டுத் தொகை ஐந்து.

தி.மு.க.வின் மூலம் ஆட்சியைப் பறிகொடுத்தவர் ஜெயலலிதா. இதன் கூட்டுத் தொகை ஐந்து.

ஜெயலலிதாவை பர்கூரில் வென்ற தி.மு.க. வேட்பாளர் 'சுகவனம்'. இதன் கூட்டுத் தொகை ஐந்து.

ஒரு தேர்தலில் முதல் வெற்றியை கலைஞருக்கு காணிக்கை வழங்கிய தொகுதி 'துறைமுகம்', இதன் கூட்டுத் தொகை ஐந்து.

அதில் வென்ற பேராசிரியர் அன்பழகன் சட்டசபையின் முன்னவர் ஆக இருந்தார். இதன் கூட்டுத் தொகை ஐந்து.

நான்காவது முறையாக கலைஞர் முதல்வராக பதவியேற்ற மாளிகையின் பெயர் 'ராஜ்பவன்'. இதன் கூட்டுத் தொகை ஐந்து.

கலைஞர் என்ற பட்டம் கிடைக்கக் காரணமாக இருந்த நாடகம் 'தூக்கு மேடை'. இதன் கூட்டுத் தொகை ஐந்து.

கலைஞருக்கு மிகவும் பிடித்தமான விளையாட்டு 'கிரிக்கெட்'. இதன் கூட்டுத் தொகை ஐந்து.

நாடே திரும்பிப் பார்க்கும் நலத் திட்டங்கள்

பிச்சைக்காரர் மறுவாழ்வு இல்லங்கள், கண்ணொளி திட்டம், முக்கிய நாட்களில் இலவச அரிசி வழங்கும் திட்டம், இலவச மூக்கு கண்ணாடி வழங்கும் திட்டம், கைரிக்ஷாக்களை ஒழித்தது, குடிசை மாற்று வாரியம், குடும்ப நலத்திட்டம், பெண்களுக்கும் சம சொத்துரிமை சட்டம், ஏழைப் பெண்களுக்கு ரூபாய் 20,000 திருமண உதவி, கலப்புத் திருமணத்திற்கும் விதவைத் திருமணத்திற்கும் ஊக்கத் தொகை, ஏழைப் பெண்களுக்கு பிரசவ உதவி, ஏழைப் பெண்களுக்கு பட்டப்படிப்பு வரை இலவசக் கல்வி, ஆதி திராவிடர் இலவச வீட்டுத் திட்டம், பிற்பட்டோர் நலனுக்கு தனித்துறைகளைத் தோற்றுவித்தது.

மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு தனி ஒதுக்கீடு. பெண்களுக்கு சொத்தில் சமஉரிமை, சிறுபான்மை யினருக்கு தனி இட ஒதுக்கீடு.

பெரியார் நினைவு சமத்துவபுரம், உழவர் சந்தை, அண்ணா மறுமலர்ச்சி திட்டம், நமக்கு நாமே திட்டம், வருமுன் காப்போம்.

ரூ.2-க்கு 1 கிலோ அரிசி, இலவச வண்ண தொலைக்காட்சி பெட்டி. இலவச எரிவாயு அடுப்பு. ஏழைகளுக்கு இலவச நிலம், சத்துணவில் வாரம் மூன்று முட்டை. அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் உரிமை.

Tags:    

Similar News