விளையாட்டு

இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் கடைசி ஒருநாள் போட்டி: சேப்பாக்கத்தில் குவிந்த ரசிகர்கள்

Update: 2023-03-22 06:04 GMT
  • சென்னையில் நடைபெறும் ஆட்டம் மிகவும் முக்கியமானது. ஏனென்றால் வெற்றிபெறும் அணி தொடரை கைப்பற்றும்.
  • இந்தியா, ஆஸ்திரேலிய வீரர்கள் வெற்றிக்காக கடுமையாக போராடுவார்கள் என்பதால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை:

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

இரு அணிகள் இடையேயான 4 போட்டிக்கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

3 ஒருநாள் தொடரில் மும்பையில் நடந்த முதல் ஆட்டத்தில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. விசாகப்பட்டினத்தில் நடந்த 2-வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கிறது.

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று பிற்பகலில் தொடங்குகிறது.

சென்னையில் நடைபெறும் இந்த ஆட்டம் மிகவும் முக்கியமானது. ஏனென்றால் வெற்றிபெறும் அணி தொடரை கைப்பற்றும். இதனால் இந்தியா, ஆஸ்திரேலிய வீரர்கள் வெற்றிக்காக கடுமையாக போராடுவார்கள் என்பதால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரோகித்சர்மா தலைமையிலான இந்திய அணி டெஸ்டை போலவே ஒரு நாள் தொடரையும் வெல்லும் ஆர்வத்தில் இருக்கிறது. டெஸ்ட் தொடரை இழந்ததால் ஒருநாள் தொடரையாவது கைப்பற்றி விட வேண்டும் என்ற வேட்கையில் ஸ்டீவ் சுமித் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி உள்ளது.

இந்த போட்டிக்காக இரு அணி வீரர்களும் நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.

சேப்பாக்கம் மைதானத்தில் 3½ ஆண்டுகளுக்கு பிறகு ஒருநாள் போட்டி நடைபெறுவதால் சென்னை ரசிகர்கள் ஆவலுடன் இந்தப் போட்டியை எதிர் நோக்கி இருந்தனர். இதனால் இந்தப் போட்டிக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்து விட்டன.

இந்தியா-ஆஸ்திரேலியா போட்டியை பார்க்கும் ஆவலில் காலையில் இருந்தே ரசிகர்கள் சேப்பாக்கம் ஸ்டேடியம் முன்பு திரண்டனர்.

நேரம் செல்ல செல்ல அதிக அளவிலான ரசிகர்கள் சேப்பாக்கம் பகுதியில் குவிந்தனர். 11 மணி அளவில் ரசிகர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். அதாவது போட்டி தொடங்குவதற்கு 2 மணி நேரத்துக்கு முன்பே ரசிகர்கள் மைதானத்துக்குள் சென்றனர்.

சேப்பாக்கம் மைதானத்தை சுற்றிலும் உள்ள வாலாஜா ரோடு, பெல்ஸ் சாலை, விக்டோரியா சாலை பகுதிகளில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. நீண்ட வரிசையில் ரசிகர்கள் நின்று ஸ்டேடியத்திற்குள் நுழைந்தனர்.

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் உறுப்பினர்களும், போலீசாரும் இணைந்து ரசிகர்களுக்கு எந்த நுழைவு வாயில் வழியாக ஸ்டேடியத்திற்குள் செல்ல வேண்டும் என்று டிக்கெட்டுகளை பார்த்து அனுப்பி வைத்தனர். டிக்கெட் இல்லாத ரசிகர்கள் தங்களுக்கு டிக்கெட் கிடைத்து விடாதா? என்ற ஏக்கத்தில் ஸ்டேடியத்தை சுற்றி வலம் வந்தனர்.

 


கிரிக்கெட் போட்டியையொட்டி சேப்பாக்கத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. சுமார் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

போலீசார் தீவிர பரிசோதனை செய்த பிறகே ரசிகர்கள் மைதானத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். ஸ்டேடியத்தை சுற்றிலும் போலீசார் நிறுத்தப்பட்டு இருந்தனர். வீரர்கள் தங்கும் இடத்தில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

மேலும் மோப்ப நாய், வெடிகுண்டு நிபுணர்கள் மூலம் ஸ்டேடியத்துக்குள் சோதனை நடத்தப்பட்டது.

அண்ணாசாலை, வாலாஜா சாலை, காமராஜர் சாலை பகுதியில் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் பணியிலும் போலீசார் ஈடுபட்டனர். போட்டியையொட்டி அந்த பகுதியில் போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டு இருந்தது.

கிரிக்கெட் போட்டியையொட்டி ரசிகர்களுக்காக இலவச மினி பஸ் வசதிக்கும் மெட்ரோ ரெயில் நிறுவனம் ஏற்பாடு செய்து இருந்தது. அரசினர் தோட்டம் முதல் சேப்பாக்கம் ஸ்டேடியம் வரை காலை 11 மணி முதல் போட்டி முடியும் வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் நெரிசல் மிகுந்த நேரத்தில் வழங்கப்படும் மெட்ரோ ரெயில் சேவை வழக்கமான நாட்களில் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை இருக்கும். இந்த சேவை இன்று மட்டும் 10 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News