விளையாட்டு

பயிற்சியின்போது மும்பை முன்னாள் கேப்டன் ரோகித் சர்மாவுடன் பேசிக்கொண்டு இருக்கிறார், லக்னோ கேப்டன் லோகேஷ் ராகுல்.

நெருக்கடிக்கு மத்தியில் மும்பை இந்தியன்ஸ் லக்னோ அணியுடன் இன்று மோதல்

Published On 2024-04-30 05:44 GMT   |   Update On 2024-04-30 05:44 GMT
  • 5 முறை சாம்பியனான மும்பை அணி இந்த சீசனில் தொடர்ந்து தகிடுதத்தம் போடுகிறது.
  • இவ்விரு அணிகளும் இதுவரை 4 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன.

லக்னோ:

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் லக்னோவில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் 48-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், முன்னாள் சாம்பியன் மும்பை இந்தியன்சுடன் மோதுகிறது.

லக்னோ அணி 9 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி, 4 தோல்வியுடன் 10 புள்ளி பெற்றுள்ளது. சென்னையை தொடர்ந்து 2 முறை வீழ்த்திய லக்னோ அணி முந்தைய லீக் ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தானிடம் பணிந்தது.

லக்னோ அணியில் பேட்டிங்கில் கேப்டன் லோகேஷ் ராகுல் (378 ரன்), நிகோலஸ் பூரன், மார்கஸ் ஸ்டோனிஸ், குயின்டாக் டி காக்கும், பந்து வீச்சில் யாஷ் தாக்குர், மொசின் கான், குருணல் பாண்ட்யா, ரவி பிஷ்னோயும் நம்பிக்கை அளிக்கிறார்கள். வயிற்று பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த சில ஆட்டங்களில் ஆடாத இளம் வேகப்பந்து வீச்சாளர் மயங்க் யாதவ் முழு உடல் தகுதியை எட்டி விட்டதாகவும், அனேகமாக அவர் இன்றைய ஆட்டத்துக்கான அணியில் இடம் பெறுவார் என்றும் அந்த அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கல் தெரிவித்துள்ளார். மணிக்கு 156 கிலோ மீட்டர் வேகத்துக்கு மேலாக பந்து வீசி அச்சுறுத்தும் மயங்க் யாதவின் வருகை அந்த அணியின் பந்து வீச்சை மேலும் பலப்படுத்தும்.

5 முறை சாம்பியனான மும்பை அணி இந்த சீசனில் தொடர்ந்து தகிடுதத்தம் போடுகிறது. இதுவரை 9 ஆட்டங்களில் ஆடி 3 வெற்றி, 6 தோல்வியுடன் 6 புள்ளி பெற்றுள்ளது. கடந்த 2 ஆட்டங்களில் ராஜஸ்தான், டெல்லி அணிகளிடம் உதை வாங்கிய மும்பை அணிக்கு எஞ்சிய 5 ஆட்டங்களும் முக்கியமானதாகும். ஒன்றில் தோற்றாலும் அந்த அணியின் அடுத்த சுற்று (பிளே-ஆப்) வாய்ப்பு ஏறக்குறைய முடிவுக்கு வந்து விடும். எனவே வாழ்வா-சாவா? நெருக்கடிக்கு மத்தியில் களம் இறங்குகிறது.

மும்பை அணியில் பேட்டிங்கில் திலக் வர்மா (336 ரன்), ரோகித் சர்மா (311), இஷான் கிஷன், கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, சூர்ய குமார் யாதவ், டிம் டேவிட் என்று பெரிய பட்டாளமே இருக்கிறது. இருப்பினும் அவர்களிடம் இருந்து ஒருங்கிணைந்த செயல்பாடு வெளிப்படவில்லை. பந்து வீச்சில் அந்த அணி பும்ராவையே (14 விக்கெட்) அதிகம் நம்பி இருக்கிறது. கடந்த ஆட்டத்தில் ஜெரால்டு கோட்ஜீக்கு பதிலாக கொண்டு வரப்பட்ட லுக் வுட் 68 ரன்களை வாரி வழங்கியதால் அவர் தனது இடத்தை தக்கவைப்பது கடினமாகும்.

சிக்கலின்றி அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க இரு அணிகளும் கடுமையாக மல்லுக்கட்டும் என்பதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது. இவ்விரு அணிகளும் இதுவரை 4 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் லக்னோ 3 ஆட்டத்திலும், மும்பை ஒரு ஆட்டத்திலும் வென்று இருக்கின்றன.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

லக்னோ: குயின்டான் டி காக், லோகேஷ் ராகுல் (கேப்டன்), மார்கஸ் ஸ்டோனிஸ், தீபக் ஹூடா, நிகோலஸ் பூரன், ஆயுஷ் பதோனி, குருணல் பாண்ட்யா, மயங்க் யாதவ், ரவி பிஷ்னோய், மொசின் கான், யாஷ் தாக்குர்.

மும்பை: இஷான் கிஷன், ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா (கேப்டன்), நேஹல் வதேரா, டிம் டேவிட், முகமது நபி, பியுஷ் சாவ்லா, லுக் வுட் அல்லது ஜெரால்டு கோட்ஜீ, பும்ரா.

இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன. 

Tags:    

Similar News