கிரிக்கெட் (Cricket)

2011 உலகக் கோப்பையை வெல்ல சச்சின் கொடுத்த ஐடியா கை கொடுத்தது: யுவராஜ் சிங்

Published On 2025-08-12 19:40 IST   |   Update On 2025-08-12 19:40:00 IST
  • களத்திற்கு செல்லும் வரை காதில் ஹெட்போனை போட்டுக் கொள்ளுங்கள்.
  • கோப்பையை வெல்வதற்கு குறிப்பிட்ட தருணத்தில் அணியாக வெற்றி பெற முயற்சிக்க வேண்டும். அதை நாங்கள் செய்தோம்.

ஐசிசி 2025 மகளிர் உலகக் கோப்பை வரும் செப்டம்பர் 30-ம் தேதி இந்தியாவில் கோலாகலமாக துவங்க உள்ளது. வரலாற்றில் ஒரு முறை கூட இந்திய மகளிர் கிரிக்கெட் அணி உலகக் கோப்பையை வென்றதில்லை.

இம்முறை 2011 போல இந்திய மகளிர் சொந்த மண்ணில் உலகக் கோப்பையை வென்று நீண்ட நாள் கனவை நிஜமாக்கும் வாய்ப்பை பெற்றுள்ளது.

அந்த நிலையில் நேற்று மும்பையில் 2025 மகளிர் உலகக் கோப்பையை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் 2011 உலகக் கோப்பையில் தான் வெளிப்புற சத்தங்களை காதில் வாங்காமல் உலகக் கோப்பையை வென்று காட்ட வேண்டும் என்று சச்சின் மற்றும் பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டன் சொன்னதாக யுவராஜ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

அதுவரை எந்த அணியும் சொந்த மண்ணில் உலகக் கோப்பையை வென்றதில்லை. நாங்கள் 28 வருடங்களாக உலகக் கோப்பையை வெல்லவில்லை. அப்படிப்பட்ட சூழ்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியை சமன் செய்த நாங்கள் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக வெற்றி பெறும் நிலையிலிருந்து தோற்றோம். அப்போது நாங்கள் ஏராளமான விமர்சனங்களையும் சந்தித்தோம்.

அப்போது எங்களிடம் வந்த சச்சின் மற்றும் கேரி, இங்கிருந்து நாம் கோப்பையை வெல்வதற்கான விஷயங்களை செய்ய வேண்டும். அதற்காக யாரும் தொலைக்காட்சியைப் பார்க்கக்கூடாது. செய்தித்தாளை படிக்கக் கூடாது என்று சொன்னார்கள்.

களத்திற்கு செல்லும் வரை காதில் ஹெட்போனை போட்டுக் கொள்ளுங்கள். களத்தில் கவனத்தைச் செலுத்துங்கள். சத்தங்களை நிறுத்தி கோப்பையை வெல்ல முயற்சியுங்கள் என்றும் சச்சின், கேரி சொன்னார்கள். கோப்பையை வெல்வதற்கு குறிப்பிட்ட தருணத்தில் அணியாக வெற்றி பெற முயற்சிக்க வேண்டும். அதை நாங்கள் செய்தோம். அது வேலையும் செய்தது.

என்று யுவராஜ் சிங் கூறினார்.

Tags:    

Similar News