ஆசியக் கோப்பை கிரிக்கெட்: மைதானத்தில் நடந்த சம்பவத்தை பகிர்ந்த திலக் வர்மா
- சமீபத்தில் நடைபெற்ற ஆசியக் கோப்பையை இந்தியா வென்றது.
- பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மோசின் நக்வியிடமிருந்து ஆசிய கோப்பையைப் பெற இந்தியா மறுத்தது.
சமீபத்தில் நடைபெற்ற ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா 9-வது முறையாக சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றது. அப்போது ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவரும், பாகிஸ்தான் உள்துறை அமைச்சருமான மோசின் நக்வியிடமிருந்து கோப்பையைப் பெற இந்தியா மறுத்தது.
இதையடுத்து, அந்தக் கோப்பையை மோசின் நக்வி கொண்டு சென்றார். இந்திய அணியினர் கோப்பை இல்லாமலேயே வெற்றியைக் கொண்டாடினர். இவ்விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்தக் கோப்பையை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என பிசிசிஐயும் வலியுறுத்தியது.
அதற்குப் பதிலளித்த நக்வி, கோப்பையை தாம்தான் வழங்குவேன் எனவும் வரும் நவம்பர் 10-ம் தேதி துபாயில் இந்திய அணிக்கு ஆசியக் கோப்பையை வழங்கும் நிகழ்ச்சியை வைத்திருப்பதாகவும், இதில் தவறாமல் இந்திய அணி வீரர்களும் கேப்டன் சூர்யகுமார் யாதவும் கலந்துகொள்ள வேண்டும்' எனத் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், ஆசியக் கோப்பை தொடர்பாக அன்றைய இறுதிப் போட்டியில் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்ட திலக் வர்மா, தற்போது அதுகுறித்த புதிய விவரங்களை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
நாங்கள் உண்மையில் ஒரு மணிநேரம் மைதானத்தில் காத்திருந்தோம். டிவி காட்சிகளைப் பார்த்தால், நான் தரையில் படுத்திருப்பதை நீங்கள் காண்பீர்கள். மீதமுள்ளவர்களும் தரையில் படுத்திருந்தனர். அர்ஷ்தீப் சிங் ரீல்ஸ் செய்வதில் மும்முரமாக இருந்தார். நாங்கள் காத்திருந்தோம், 'கோப்பை எப்போது வேண்டுமானாலும் வரும்' என்று நினைத்துக் கொண்டிருந்தோம்.
ஒரு மணி நேரம் ஆகிவிட்டது. நாங்கள் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தோம். ஆனால் கோப்பை வரவில்லை. சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி, கோப்பையைப் பெறப் போவதில்லை என்பதை அறிந்ததும், அர்ஷ்தீப் சிங்தான் ஒரு ஐடியா கொடுத்தார்.
கோப்பையை தவிர்த்து கொண்டாட வேண்டும் என்று அவர் கூறினார். அபிஷேக் சர்மா உள்ளிட்ட நாங்கள், மேலும் 5-6 பேருடன் சேர்ந்து, அதற்கு ஒப்புதல் அளித்தோம். பின்னர் அதையே செய்து காட்டினோம்.
என திலக் வர்மா கூறினார்.