சூர்யவன்ஷி , ஆரோன் ஜார்ஜ் அதிரடி சதம்: தென் ஆப்பிரிக்காவுக்கு இமாலய இலக்கு நிர்ணயித்த இந்தியா
- வைபவ் சூர்யவன்ஷி 127 ரன்களுடனும், ஆரோன் ஜார்ஜ் 118 ரன்களுடனும் ஆட்டமிழந்தனர்.
- 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 393 ரன்கள் குவித்தது.
இந்திய இளையோர் கிரிக்கெட் அணி (19 வயதுக்கு உட்பட்டோர்) தென் ஆப்பிரிக்கா சென்று 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. இதில் நடந்து முடிந்துள்ள 2 போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை இந்தியா ஏற்கனவே கைப்பற்றியுள்ளது.
இந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணியின் கேப்டன் முகமது பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் இந்திய அணி தொடக்க வீரர்களாக வைபவ் சூர்யவன்ஷி , ஆரோன் ஜார்ஜ் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் சதம் அடித்து அசத்தினர்.
இதில் வைபவ் சூர்யவன்ஷி 127 ரன்களுடனும், ஆரோன் ஜார்ஜ் 118 ரன்களுடனும் ஆட்டமிழந்தனர். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 227 ரன்கள் எடுத்தது. அடுத்து வந்த வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இதனால் 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 393 ரன்கள் குவித்தது.