டெஸ்டில் பல சாதனைகளை படைக்க காத்திருக்கும் ரிஷப் பண்ட்
- உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் அதிக ரன்களைக் குவித்த இந்திய வீரர் எனும் சாதனையை பண்ட் படைக்கவுள்ளார்.
- சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ரிஷப் பண்ட் இதுவரை 86 சிக்சர்களை அடித்துள்ளார்.
இங்கிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதலாவது டெஸ்டில் இங்கிலாந்தும், 2-வது டெஸ்டில் இந்தியாவும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கிறது.
இதனையடுத்து இரு அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்சில் இந்திய நேரப்படி நாளை மாலை 3.30 மணிக்கு தொடங்குகிறது.
இந்நிலையில் இந்த போட்டியில் இந்திய அணியின் துணைக்கேப்டன் ரிஷப் பண்ட், டெஸ்டில் சில சாதானைகளைப் படைக்கவுள்ளார்.
அதன்படி இப்போட்டியில் ரிஷப் பண்ட் மேற்கொண்டு 122 ரன்களைச் சேர்க்கும் பட்சத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் அதிக ரன்களைக் குவித்த இந்திய வீரர் எனும் பெருமையைப் பெறுவார். முன்னதாக இந்த பட்டியலில் சமீபத்தில் சர்வதேச டெஸ்டில் இருந்து ஓய்வை அறிவித்த ரோகித் சர்மா 2716 ரன்களுடன் முதலிடத்திலும், விராட் கோலி 2617 ரன்களுடன் 2-ம் இடத்திலும் உள்ளனர். ரிஷப் பண்ட் 2594 ரன்களுடன் 3-ம் இடத்தில் உள்ளார்.
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ரிஷப் பண்ட் இதுவரை 86 சிக்சர்களை அடித்துள்ளார். அவர் மேலும் ஆறு சிக்சர்களை அடிக்கும் பட்சத்தில் இந்த வடிவத்தில் இந்தியாவுக்காக அதிக சிக்சர்களை அடித்த வீரர்களின் பட்டியலில் முதல் இடத்தை பிடிக்கும் வாய்ப்பை பெறுவார். தற்போது இந்தப் பட்டியலில் முன்னாள் வீரர்கள் வீரேந்தர் சேவாக் 91 சிக்சர்களை அடித்து முதலிடத்திலும், ரோகித் சர்மா 88 சிக்சர்களுடன் 2-வது இடத்திலும் உள்ளனர்.