பாலியல் புகார்: உ.பி. டி20 தொடரில் விளையாட யாஷ் தயாளுக்கு தடை
- யாஷ் தயாள் மீது இளம்பெண் அளித்த பாலியல் புகாரின் பேரில் அவர் மீது போக்சோ வழக்கு பதியப்பட்டுள்ளது.
- யாஷ் தயாளின் இடைக்கால ஜாமீன் மனுவை ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் நிராகரித்தது.
உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள். இவர் கடந்த 2024-ம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடி வருகிறார்.
ஆர்சிபி அணிக்காக விளையாடி வரும் யாஷ் தயாள் மீது இளம் பெண் அளித்த பாலியல் புகாரின் பேரில் அவர் மீது போக்சோ வழக்கு பதியப்பட்டுள்ளது.
இதனையடுத்து அவர் இந்த வழக்கு தொடர்பான விசாரணையையும் எதிர்கொண்டு வருகிறார். அதிலும், சில தினங்களுக்கு முன்னதாக யாஷ் தயாளின் இடைக்கால ஜாமீன் மனுவை ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் நிராகரித்ததுடன், வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 22-ம் தேதிக்கு ஒத்திவைத்தது. மேலும், இந்த வழக்கில் காவல் துறையின் நடவடிக்கைகளை நிறுத்தவும் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
உத்தரபிரதேச டி20 லீக் தொடரின் 3-வது சீசன் வரும் 17-ம் தேதி தொடங்க உள்ளது. இந்த தொடரில் பங்கேற்க வேகப்பந்து வீச்சாளரான யாஷ் தயாளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பாலியல் வன்கொடுமை வழக்கில் சிக்கியதன் காரணமாக அவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. யாஷ் தயாளை ரூ.7 லட்சம் கொடுத்து கோரக்பூர் லயன்ஸ் ஏலத்தில் வாங்கியது குறிப்பிடத்தக்கது.