ரஞ்சி டிராபி: தமிழ்நாடு அணி பரிதாபம்- 93 ரன்னில் சுருண்டு பாலோ-ஆன்
- ஜார்க்கண்ட் முதல் இன்னிங்சில் 419 ரன்கள் குவித்தது.
- தமிழ்நாடு 14 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.
ரஞ்சி கோப்பை தொடரின் முதல் போட்டி கடந்த 15ஆம் தேதி தொடங்கியது. தமிழ்நாடு- ஜார்க்கண்ட் அணிகளுக்கு இடையிலான போட்டி கோவையில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஜார்க்கண்ட் முதலில் பேட்டிங் தேர்வு செய்து, முதல் இன்னிங்சில் 419 ரன்கள் குவித்தது. அந்த அணியின் கேப்டன் இஷான் கிஷன் 247 பந்தில் 173 ரன்கள் விளாசினார். தமிழ்நாடு அணியில் குர்ஜப்னீத் சிங் 4 விக்கெட் வீழ்த்தினார்.
பின்னர் தமிழ்நாடு அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. முதல் ஐந்து வீரர்கள் பாலசுப்ரமணியன் சச்சின் (0), என். ஜெகதீசன் (3), பிரதோஷ் ரஞ்சன் பால் (9), அந்த்ரே சித்தார்த் (2), பாபா இந்திரஜித் (0) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 14 ரன்கள் எடுப்பதற்குள் முதல் 5 விக்கெட்டுகளை இழந்தது. இதனால் நேற்றைய 2ஆவது நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 18 ரன்கள் எடுத்து திணறிய நிலையில் இருந்தது.
இன்று 3ஆவது நாள் ஆட்டமும் தொடங்கியது. இன்றைய ஆட்டத்திலும் தமிழ்நாடு அணி திணறியது. அம்ப்ரிஸ் 28 ரன்களும், ஜெகநாதன் ஹேம்சுதேசன் 14 ரன்களும், குர்ஜப்னீத் சிங் 12 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்க 93 ரன்னில் சுருண்டது.
ஜார்க்கண்ட் அணி சார்பில் ஜத்தின் பாண்டே 5 விக்கெட்டும், சஹில் ராஜ் 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.
326 ரன்கள் முன்னிலைப் பெற்ற ஜார்க்கண்ட் பாலோ-ஆன் கொடுத்தது இதனால் தமிழ்நாடு அணி தொடர்ந்து 2ஆவது இன்னிங்சில் பேட்டிங் செய்து வருகிறது. இன்றைய 3ஆவது நாள் ஆட்ட முடிவில் 52 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்துள்ளது.